தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை 2022 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 18 ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன தாக்கல் செய்தார்.
"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து"
என்ற திருவள்ளுவரின் குறள் 738 -ஐ குறிப்பிட்டு உரையை தொடங்கினார்.
அதன் பிறகு அவர் பேசிய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
இந்த வரவு செலவுத் திட்டம் பின்வரும் பொருண்மைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தும்:
> வேளாண்மை உள்ளிட்ட முதன்மைத் துறைகளின் வளர்ச்சி வீதத்தை அதிகரித்தல்.
> சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்துதல்
> பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்புத் திட்டங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலை பெறும் திறனை அதிகரித்தல்
> புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும் தற்போதிருக்கும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் வாயிலாகவும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
> கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டின் மூலம் மகளிரின் முன்னேற்றம்.
> விளிம்பு நிலையில் உள்ளோரின் சமூக-பொருளாதார முன்னேற்றம்.
> அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலம் வறுமையை ஒழித்தல்
> அனைத்துத் தளங்களிலும் சமூகநீதியை நிலைநாட்டுதல்
> தரவுகள் அடிப்படையிலான ஆளுகை வாயிலாக பொதுமக்களுக்கு மானியங்களும் சேவைகளும் முழுமையாகச் சென்றடைவதை உறுதிசெய்தல்
> கட்டமைப்புகள் உருவாக்க போதிய நிதி ஆதாரங்களைக் கண்டறிதல்
> சுற்றுச்சூழலில் நீடித்த நிலைத்த தன்மையையும், தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தையும் உறுதிசெய்தல்
முதல்வரின் முகவரி.
பொதுமக்களின்குறைகளைஉடனுக்குடன் தீர்த்தும், தேவைகளை நிறைவு செய்தும், மக்கள் நல அரசின் இலக்கணமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நோக்கத்தோடுதான், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையையும், முதலமைச்சரின் தனிப் பிரிவையும் (CM Cell)இணைத்து “முதல்வரின்முகவரி” என்றபுதியதுறைஉருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் இதுவரை, 10,01,883 மனுக்களுக்கு உரியதீர்வுகாணப்பட்டுள்ளது.
ஒன்றிய மாநில நிதி உறவுகள்:
மதிப்புக்கூட்டுவரி நடைமுறையில் இருந்தபோது,தமிழ்நாடுஅடைந்தவருவாய்வளர்ச்சியை, சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் எட்ட இயலவில்லை. இதுமட்டுமின்றி, கோவிட் பெருந்தொற்று அனைத்து மாநிலங்களின் நிதிநிலையை பெருமளவில் பாதித்துள்ளது.
இந்நிலையில், சரக்கு மற்றும் சேவைவரி இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கும் கால வரையறை 30.6.2022ஆம் நாளன்று முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் நிதியாண்டில், சுமார் 20,000 கோடிரூபாய் நிதி இழப்பினை தமிழ்நாடு சந்திக்க நேரிடும்.
கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையால் பாதிக்கப்பட்டமாநிலங்களின் வருவாய் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால், இந்த இழப்பீட்டை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு ஒன்றிய அரசிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த நியாயமான கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கும் என நம்புகிறேன்.
நாட்டின் மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.12 சதவீதமாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 10 சதவீதமாகும்.இவற்றிற்கு ஏற்ற நிதிப்பகிர்வை மத்திய நிதிக்குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை.
15வது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 4.079 சதவீதமாகும். 15வது மத்திய நிதிக்குழு ஐந்தாண்டு காலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியமாக மொத்தம் 21,246 கோடி ரூபாயை பரிந்துரைத்துள்ளது.
இத்தொகையானது, 14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 17,010 கோடி ரூபாய் மானியங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு குறிப்பிட்ட மானியங்களையும், துறைகளுக்கு குறிப்பிட்ட மானியங்களையும் 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. இத்தொகையை நடைமுறையிலுள்ள ஒன்றிய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுடனும் (Centrally Sponsored Schemes) ஒன்றிய துறைத் திட்டங்களுடனும் (Central Sector Schemes) இணைக்காமல், தனியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மாநில நிதிக்குழு:
பெருந்தொற்றின் காரணமாக, ஆறாவது மாநில நிதிக் குழுவின் காலவரை இந்த அரசால் ஒன்பது மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அண்மையில் இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின்மீது, அரசு தனது நடவடிக்கை எடுத்த அறிக்கையை (Action Taken Report) விரைவில் இம்மாமன்றத்தில் தாக்கல் செய்யும்.
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடு:
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று தமிழ் மொழியைப் போற்றி, அதனை உலகெங்கும் பரவச் செய்வதே இந்த அரசின் தலையாய குறிக்கோளாகும். தமிழ்மொழியின் தொன்மையையும்செம்மையையும் நிலைநாட்டிட, பிற உலக மொழிகளுடன்தமிழின் மொழியியல் உறவு குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும்.தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக,இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்திடவும், பகுத்தறிவைப் பரப்பிடவும், பெண்ணடிமைத்தனத்தை ஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும்வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். அவரின் சிந்தனைகளும் எழுத்துக்களும் காலத்தை வென்று இன்றும் ஒளிர்கின்றன. தனித்துவமிக்க அவரது எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்று, அவரது முற்போக்குச் சிந்தனையால் அனைவரையும் பயனடையச் செய்வது இந்த அரசின் கடமையாகும்.
இதனை நிறைவேற்றும் விதமாக, உரிய அறிஞர் குழுவின் பரிந்துரைகளின்படி, பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். இப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கப்படும்:
தாய்மொழி கல்வியே தலைசிறந்த கல்வி என்பது அறிவியல் கூறும் உண்மையாகும். தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாடநூல், நோட்டுப்புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகள், அரசு நிதியுதவியின்றிச் செயல்பட்டு வரும், தமிழ்வழியில் மட்டும் பாடங்களைக் கற்பிக்கும் பள்ளிகளில் இலவசமாக 1 முதல் 10 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
தொல்லியல் இடங்களைத் தேடிக் கள ஆய்வு:
மாநிலத் தொல்லியல் துறை கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளுடன் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய மூன்று இடங்கள் உட்பட ஏழு இடங்களில் நடப்பாண்டில் அகழாய்வுகளை மேற்கொள்கின்றது. மேலும், புதிய கற்கால இடங்களைத் தேடி 5 மாவட்டங்களில் கள ஆய்வும் (Exploration), பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் இடங்களைத் தேடிக் கள ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.
இடைச் சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கையில் ஆழ்கடலாய்வு மேற்கொள்வதற்கு உகந்த இடத்தினை கண்டறிவதற்கு இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகத்துடன் இணைந்து இந்த ஆண்டு முன்கள ஆய்வு (Reconnaissance) மேற்கொள்ளப்பட உள்ளது. ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள், இரண்டு இடங்களில் கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன்கள ஆய்வுப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள்:
பொதுமக்கள், குறிப்பாக மாணவர்களிடையே தமிழ் தொல்லியல் மரபு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்திடவும், நமது மாநிலத்தில் கிடைத்துள்ள அரும்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கவும், அருங்காட்சியகங்களும், அகழ்வைப்பகங்களும் (On Site Museums) மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாண்டு, விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள தொல்பழங்கால அகழ்வைப்பகம், தர்மபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
புனரமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு:
மாநிலத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டடங்களைஅவற்றின் தனித்துவம்மாறாமல் புனரமைத்து, பாதுகாக்கும் பொருட்டு இக்கட்டடங்களைச் சீரமைப்பதற்கு இவ்வாண்டு சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Tamil Nadu Budget 2022 Update: உயர்கல்வித் துறைக்கு 5,668.89 கோடி ரூபாய்
தமிழ் வளர்ச்சித் துறைக்கு 82.86 கோடி ரூபாய்:
இம்மதிப்பீடுகளில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு 82.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
நிலஅளவைப் பணிகளுக்கு 15 கோடி ரூபாய்:
அரசு நிலங்களில் நிலஅளவைப் பணிகள் துல்லியமாகவும் எளிதாகவும் மேற்கொள்ள, "தொடர்ந்து இயங்கும் தொடர்பு நிலையங்களின் (Continuously Operating Reference Stations) அமைப்பு" வலுப்படுத்தப்படும். நவீன முறையில் நிலஅளவைப் பணிகளை மேற்கொள்ள நிலஅளவையர்களுக்கு “ரோவர்” (Rover Machine) கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
பரவலான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அரசு நிலங்களின் பயன்பாடு அமைவது அவசியம். அரசு நிலங்களின் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், அரசு நிலங்களை நியாயமான, வெளிப்படையான முறையில் குத்தகைக்கு விடுவதற்கும்ஒரு விரிவான நிலக்குத்தகைக் கொள்கை வகுக்கப்படும்.
அரசு நிலங்களை மீட்டெடுக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு:
நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை மீட்டெடுக்கவும், பாதுகாப்பதற்கும் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. அரசு நிலங்களைப்பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு 500 கோடி ரூபாய்:
சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு, தக்க பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளின்படி, வெள்ளத்தடுப்புப் பணிகள் முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். இப்பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு:
வானிலையைத் துல்லியமாகக் கணிக்க, “பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை” மேம்படுத்துவதன் அவசியத்தை, அண்மையில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்தியுள்ளது. பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் (Super Computers) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை அரசு உருவாக்கும். இப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக 4,816 கோடி ரூபாய் ஒதுக்கீடு:
சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளோரின் நலனிற்காக அரசால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக 4,816 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 7,474.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவல்:
சட்டம் ஒழுங்கைத் திறம்பட நிலைநாட்டுவதன் வாயிலாக தமிழ்நாடு ஓர் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றைத் தடுப்பதற்கு இந்த அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றது.
வளர்ந்து வரும் புறநகர்ப்பகுதிகளில் காவல்துறை திறம்படச் செயலாற்றிட, சென்னை காவல் ஆணையரகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஆவடியிலும், தாம்பரத்திலும் இரண்டு புதிய ஆணையரகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
மேலும், இத்துறைக்குத் தேவைப்படும் அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும். இந்த வகையில், சமூக ஊடகங்களில் செய்யப்படும், தவறானபிரச்சாரங்களின் விளைவாக, அதிகரித்து வரும் குற்றச்செயல்களைத் தடுத்திட, “சமூக ஊடக சிறப்பு மையம்” அமைக்கப்படும்.
இம்மதிப்பீடுகளில் காவல்துறைக்கு 10,285.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தீயணைப்புமற்றும்மீட்புப் பணிகள்துறை:
தீ விபத்துகளைத் தவிர்ப்பதை இலக்காகக் கொண்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை நவீன மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டில், இத்துறை மொத்தமாக 16,809 தீ விபத்து அழைப்புகள் மற்றும் 57,451 மீட்புப்பணி அழைப்புகளை ஏற்று, எண்ணற்ற மனித உயிர்களையும், கால்நடை மற்றும் உடைமைகளையும் காப்பாற்றியுள்ளது.
இம்மதிப்பீட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக 496.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1000: இன்று வெளியாகிறதா அறிவிப்பு
நீதி நிருவாகம்:
வழக்குகளை விரைந்து முடித்து, தாமதமின்றி தீர்ப்புகளை வழங்கிட, நீதித்துறைக்கு அனைத்து ஆதரவையும் இந்த அரசு வழங்குகின்றது. வணிக வழக்குகளை விசாரிப்பதற்கென ஏழு வணிகநீதிமன்றங்கள்அமைத்திட, இந்த நிதியாண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இம்மதிப்பீட்டில்நீதிநிருவாகத் துறைக்கென 1,461.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு:
பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் எனஇம்மதிப்பீட்டில் மொத்தம் 4,131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய பயிர்க்கடன்கள்:
இந்த நிதியாண்டில், இதுவரை 14,15,916 விவசாயிகளுக்கு 9,773 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில், 10,76,096 குறு, சிறு விவசாயிகளுக்கு 7,428 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களும் அடங்கும்.
உணவு மானியம்:
நாட்டிலேயே முதல் முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த வரவு-செலவுத் திட்டத்தில் உணவு மானியமாக 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | TN Budget 2022: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன்
இம்மதிப்பீட்டில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 13,176.34 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நீர்வளத் துறைக்கு 7,338.36 கோடி ரூபாய்:
நடப்பாண்டில்,கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும் நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, இம்மதிப்பீடுகளில் 2,787 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்வளங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், சிறப்பாக மேலாண்மை செய்வதற்காகவும்,பாசனத்திற்காக நீரை தங்குதடையின்றி வழங்குவதற்காகவும், 3,384 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்குதல் போன்ற பணிகள் (ERM) விரைவில்தொடங்கப்பட உள்ளன.
சாத்தனூர், சோலையார், மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட 64 பெரிய அணைகளை புனரமைக்கவும், அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் இரண்டாம் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு (DRIP-II) திட்டத்திற்கு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகவங்கி மற்றும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 1,064 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக, இம்மதிப்பீடுகளில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் குறுவை சாகுபடிக்கு கடைமடைப் பகுதிகள் வரை காவிரி நீர் சென்றடைய, டெல்டா பகுதியிலுள்ள 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4,964கிலோமீட்டர்நீளமுள்ளகால்வாய்களைதூர்வாரும்சிறப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்புதலை இந்த அரசு அளித்துள்ளது. இவ்வாண்டு முன்கூட்டியே திட்டமிடுதல் மூலம், பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னரே இந்தப் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படும்.
இம்மதிப்பீடுகளில் நீர்வளத் துறைக்கு 7,338.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கால்நடைப் பராமரிப்பு
“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலார் அவர்களின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில்தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
இம்மதிப்பீடுகளில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு 1,314.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம்:
தாவரவியல் பூங்காக்கள், பல்லுயிரினங்களின் இருப்பிடங்களாகவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மையங்களாகவும் திகழ்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, லண்டன் க்யூபூங்கா (Kew Gardens) அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கும். இந்நிதியத்தின் மூலம், வளர்ச்சி நிதி நிறுவனங்கள், பன்னாட்டு காலநிலை மாற்ற நிதியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களிலிருந்து நிதி திரட்டப்படும்.
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் "வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை" அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்கு,முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும்.
வன மேலாண்மையில் பழங்குடியினரை ஈடுபடுத்துதல், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத்துறையில் திறன் மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசிற்குப் பரிந்துரைக்க வன ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும்.
அணி நிழல் காடுகளும், எழில்மிகு சூழல் சுற்றுலா தலங்களும் நிறைந்தது தமிழ்நாடு. வனங்களுக்குப் பாதகமின்றி சுற்றுச்சூழல் சுற்றுலாவை (Eco-Tourism) ஊக்குவிப்பது அரசின் கொள்கையாகும். இதன் அடிப்படையில், சேத்துமடை (கோயம்புத்தூர் மாவட்டம்), மணவணூர் மற்றும் தடியன் குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். தங்கும் இடங்கள், வனங்களைப் பற்றிய விழிப்புணர்வு மையங்கள் போன்ற பல வசதிகள் இத்தலங்களில் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் வரும் வருவாய் அப்பகுதியின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படும்.
இம்மதிப்பீடுகளில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக்கு 849.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை:
கடந்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற சிறப்பான முன்னோடிக் கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 இலட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நமது நாட்டிற்கே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் வாயிலாக 30 இலட்சம் மாணவர்கள்பயனடைந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | உக்ரைன் மாணவர்கள் கல்வியை தொடர ஏற்பாடு: பட்ஜெட்டில் தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றால் பெருமளவில் கல்வி கற்றலில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இத்திட்டம்வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்கள், புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் STEAM - அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில்முன்மாதிரிப் பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது.
வரும் நிதியாண்டில்,மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப்பள்ளிகள் (Model Schools) தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) நவீனமயமாக்குவதற்கான ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப,தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் (Smart Classrooms), இதரப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இத்திட்டங்கள்படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாநிலத்தில் இயங்கி வரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து, மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகள் வழங்க ஓர் உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன்கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். இந்நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.
சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சிகள் நடத்தப்படும். இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். புத்தகக்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.
இம்மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர் கல்வித் துறை:
தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்குப் பார்வையாகும். உலகளாவியபங்களிப்புடன், “அறிவு சார் நகரம்” (Knowledge City) ஒன்று உருவாக்கப்படும். இந்த அறிவு சார் நகரம், உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும்.
இந்நகரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், திறன் பயிற்சி மையங்கள், அறிவு சார்ந்த தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும். மேலும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO) போன்ற அரசுபொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப, அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும். இதற்காக, இவ்வாண்டு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஐந்து இலட்சம் இளைஞர்களை, படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமான‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர்களின்தனித் திறமைகள் அடையாளம் காணப்பட்டு, அவை ஊக்குவிக்கப்படும். மேலும்,தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்புத் திறன்பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்களின் வேலை பெறும் திறன் (Employability) பெருகும். இத்திட்டத்தைச் செயல்படுத்த, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகமெங்கும் பல நாடுகளில் விஞ்ஞானிகளாக, பேராசிரியர்களாக, தொழில் நிபுணர்களாக தமிழர்கள் தங்களது துறையில் சாதனை புரிகிறார்கள். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆராய்ச்சித் திறனை உயர்த்துதல், மாணவர்களுக்கு வழிகாட்டுதல், வளர்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல் போன்றவற்றை இவர்களுடன் இணைந்து செயல்படுத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்.
இளைஞர் நலன்:
ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்குவதில் வெற்றி கண்ட, “ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்” (Olympic Gold Quest) போலவே, தமிழ்நாட்டிலிருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும்உருவாக்க, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல் திட்டத்தைச் செயல்படுத்திட25 கோடி ரூபாய் வழங்கப்படும்.
பல்வேறு விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற வடசென்னையில், இளைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்றை அரசு உருவாக்கும். கைப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபடி, உள்ளரங்க விளையாட்டுகள் மற்றும் நவீன உடற்பயிற்சிக்கூட வசதிகளுடன், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் இவ்வளாகம் அமைக்கப்படும்.
சதுரங்க ஒலிம்பியாட்:
சதுரங்க விளையாட்டிற்கு உலகில் மிகவும் புகழ்பெற்ற போட்டி சதுரங்க ஒலிம்பியாட் (Chess Olympiad) ஆகும். பொதுவாக, இந்த போட்டியை நடத்துவதற்கு நாடுகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை, இந்த போட்டியை நடத்த இந்தியாவிற்கு வாய்ப்பு எட்டவில்லை. இவ்வாண்டு, இந்த அரசின் சீரிய முயற்சிகளின் பயனாக முதன்முறையாக சதுரங்க ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
150 நாடுகளைச்சேர்ந்த 2000 முன்னணி சதுரங்க வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். தமிழ்நாட்டின் விளையாட்டு துறையில் இது ஒரு திருப்புமுனையாக அமையும். இந்தப் போட்டியை சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் இந்த அரசு வழங்கும்.
இம்மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 293.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மக்கள் நல்வாழ்வு:
தரமான மருத்துவ வசதிகளை மாவட்ட அளவில்வழங்குவதற்காகவும், முக்கியத் திட்டங்களைஒருங்கிணைத்து செயல்படுத்தவும் 19 அரசு மருத்துவமனைகளைபுதிய மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்திட அரசு முடிவு செய்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் 1,019 கோடி ரூபாய் செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
உலகளாவிய நோய்த்தாக்க ஆய்வின்படி, மன அழுத்தம், பதற்றம், மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மனநல மருத்துவப் பயிற்சி பெற்ற மனித வளத்துடன் மனநோய் சிகிச்சை கட்டமைப்பை வலுப்படுத்துவது இன்றியமையாதது.
இத்தகைய உயர்தர மனநலச் சேவைகளை வழங்குவதற்காக, கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை (IMH), தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS) என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 290 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றது.
இந்த மருத்துவமனை தற்போது 500 படுக்கை வசதிகளுடன் 120 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை, 750 படுக்கை வசதிகளுடைய, தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக மேலும் தரம் உயர்த்தப்படும். இப்பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி மற்றும் தேசியசுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
தற்போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு, தமது மருத்துவக் கல்வியைத் தொடர இயலாமல் தாயகம் திரும்பியுள்ள நமது மாணவ மாணவியர் அனைவரும் தமது மருத்துவக்கல்வியை தொடருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்தியுள்ளார்கள்.
இந்த மாணவர்கள் நமது நாட்டிலோ, பிற வெளிநாடுகளிலோ மருத்துவக் கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள் ஒன்றிய அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளின் அடிப்படையில், அவர்களது எதிர்கால மருத்துவக்கல்விக்கான அனைத்து உதவிகளையும் இந்த அரசு வழங்கும்.
தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திற்கு 1,906 கோடி ரூபாயும், அவசர ஊர்தி சேவைகளுக்கு 304 கோடி ரூபாயும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 817 கோடி ரூபாயும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,547 கோடி ரூபாயும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 17,901.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூக நலன்:
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்றார் மகாகவி. ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின்கல்வியைஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1989 ஆம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது.
மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய்அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.
மேலும் படிக்க | Tamil Nadu Budget 2022: நீர்வளத் துறைக்கு 7,338.36 கோடி ரூபாய்
இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு இலட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது.இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம்,
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம்” அமைக்கப்படும். இம்மையத்தில், குழந்தைகள் மற்றும் மகளிரின் நலன், உரிமைகள், மேம்பாடு, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக சமூகநலத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2,542 கோடி ரூபாயும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு 1,949 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 5,922.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு (TANSIM) 30 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் பகுக்கக்கூடிய கொள்முதல்களில், ஐந்து சதவீதம் தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு (Particularly Vulnerable Tribal Groups) இந்த ஆண்டு 20.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும்,1000 புதிய வீடுகள் பண்டைய பழங்குடியினருக்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.
ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு 4,281.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர் விடுதிகள்:
அனைத்து அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, அதன் கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்விச் சூழல், உணவுத் தரம், பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை மறுசீரமைக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க, ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக, பொருளாதார முன்னேற்றம் அடையும் வண்ணம், தற்போது நடைமுறையில் உள்ள வாழ்வாதாரத் திட்டங்களை ஆய்வு செய்து, மாறி வரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு மறுசீரமைக்கப்படும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 322 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 162 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலன்:
தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களைப் பழுதுபார்ப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சென்னையில் உள்ள
வெஸ்லி தேவாலயம், புனித தோமையர் மலை தேவாலயம், திருநெல்வேலியில் உள்ளகால்டுவெல் தேவாலயம், நாகர்கோவிலில் உள்ள தூய சேவியர் தேவாலயம், சென்னையில் உள்ள நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி தர்கா, நாகூர் தர்கா ஆகிய தொன்மையான வழிபாட்டுத் தலங்கள்புனரமைக்கப்படும். இப்பணிகளுக்கு, வரும் நிதியாண்டில்
12 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
இம்மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு1,230.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நலன்:
சிறப்புத் தேவையுள்ள ஒவ்வொரு குழந்தையும் நன்கு வளர்வதற்கான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கு, ஆரம்பக் கட்டத்திலேயே குறைபாட்டைக் கண்டறிந்து சிகிச்சை வழங்குவது இன்றியமையாததாகும்.
தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, பள்ளிக்கல்வித் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகள் இப்பணிகளைத் தனித்தனியாகச் செய்கின்றன. இத்துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்து, பல்வேறு வகையான சிகிச்சை மையங்கள் மூலம் சிறப்புத் தேவைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அனைத்து சேவைகளையும் வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
தரமான ஆரம்ப நிலை பயிற்சி மற்றும் கல்வியை வழங்குவதற்காக, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களுக்கு அரசு சம்பள மானியம் வழங்கி வருகிறது. இந்நிறுவனங்களில் பணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் மற்றும் சிறப்பு கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 14,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகைக்காக 450 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இம்மதிப்பீடுகளில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 838.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 2016 2020 ஆம் ஆண்டுகளில் ஒப்பளிக்கப்பட்ட 1,77,922 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்திட, மேற்கூரை அமைப்பதற்காககூடுதலாக வழங்கப்படும் 70,000 ரூபாய் உட்பட ஆண்டுதோறும் வீடு ஒன்றிற்கு மொத்தம் 1,68,000 ரூபாய் மாநில அரசு வழங்கி வருகிறது.
2021-22 ஆம் ஆண்டில் 2,30,788புதிய வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்காக,4,848 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கட்டமைப்புப் பற்றாக்குறையை நிறைவு செய்து, கிராமங்களை பன்முக வளர்ச்சியடையச் செய்வது, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்– II ன் குறிக்கோளாகும்.
வரும் ஆண்டில், 1,455 கோடி ரூபாய் செலவில் 2,657 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அரசின் முன்னோடித் திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
சமத்துவம் தழைக்கும் ஏற்றத்தாழ்வுகளற்ற தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த பத்தாண்டுகளாக பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட 149 சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.
பிரதமரின் கிராம சாலைத்திட்டம் III-ன் கீழ், 1,280 கி.மீ. நீளமுள்ள 280 சாலைகளை791 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 54 பாலங்களை221 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைப்பதற்கான பணிகள் வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
மகளிர் சுயஉதவிக்குழுக்களை தற்காலத்திய தொழில்நுட்ப பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப, திறன்மிகு சுயஉதவிக் குழுக்களாக (Smart SHG) மேம்படுத்த முன்னோடி பயிற்சித் திட்டமாக (Pilot Training Basis) மதுரையில் தொடங்கப்படும். தமது முன்னேற்றத்துடன் தாம் சார்ந்துள்ள சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பங்காற்றும் வகையில் சுய உதவிக் குழுக்களை மெருகேற்றிட பயிற்சி வழங்கப்படும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2,800 கோடி ரூபாயும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 705 கோடி ரூபாயும், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்திற்கு 636 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 26,647.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம்:
திடக்கழிவு மேலாண்மை உட்பட,முழுமையானசுகாதாரத்தை உறுதி செய்வதற்கான, இரண்டாவது தூய்மை இந்தியா இயக்கம், ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் அரசால் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மாநிலப் பங்கீடாக 2,169 கோடி ரூபாயுடன் மொத்தமாக 5,465 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.கொடுங்கையூரில் பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ள குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகள் ‘Bio mining’முறையில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.
அம்ருத் 2.0 திட்டத்திற்கான ஒட்டுமொத்த திட்டமதிப்புசுமார் 13,000 கோடிரூபாயாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு ஆகியவற்றின் பங்களிப்பின் வாயிலாக இத்திட்டத்தின் மூலம் பல்வேறு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்களை அரசு செயல்படுத்தும். இம்மதிப்பீடுகளில் அம்ருத்திட்டத்திற்கு 2,130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாகத்தோற்றுவிக்கப்பட்டதாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகியஆறு மாநகராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு, தலா 10 கோடி ரூபாய் என மொத்தம் 60 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும்.
மேலும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளுக்கு தலா 2 கோடி ரூபாய் என மொத்தம் 56 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும்.
200 ஆண்டுகளுக்கு முன், ஜூன், 1822 இல் ஜான் சல்லீவன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்டதே இன்றைய நீலகிரி மாவட்டத்தின் தலைமையிடமான உதகை நகரமாகும். இதனை நினைவுகூறும் வகையில் சிறப்புத் திட்டங்களும் நிகழ்ச்சிகளும் மேற்கொள்ள 10 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படுகிறது.
நகர்ப்புரப் பகுதிகளைப் பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.
அண்மையில் நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று, புதிய மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர். நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய, கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாயும், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்கு1,875 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 20,400.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்கல்:
மாநிலத்தின்அனைத்துமக்களுக்கும்போதுமானகுடிநீர்வழங்குவதைஉறுதிசெய்வதற்குஅரசுமுன்னுரிமைஅளித்துவருகிறது. தற்போது, தமிழ்நாடுகுடிநீர்வடிகால்வாரியத்தால்542 கூட்டுக்குடிநீர்திட்டங்கள் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 2,208கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் 5.64 இலட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 6 புதியகூட்டு குடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும். குடியிருப்புக்கு குடிநீர் (ஜல்ஜீவன்) திட்டத்திற்காக 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி:
மெட்ரோ இரயில் தடங்கள், புறநகர் இரயில் தடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், புறவழிச்சாலைகள், வெளிவட்டச்சாலைகள்போன்ற போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டியுள்ள பகுதியில் நகர்ப்புர வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, அப்பகுதிகளில் தற்போதுள்ள தளப்பரப்புக் குறியீட்டை (FSI) உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதனுடன், இந்தப் பகுதிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பழுதடைந்த, பழைய குடியிருப்புப் பகுதிகளின் மறுமேம்பாடு (Re-Development) மேற்கொள்ளப்படும். இதற்காக, அரசு ஒரு “மறுமேம்பாட்டுக் கொள்கையை” இந்த ஆண்டு வெளியிடும். இதுவரை அறுபது திட்டங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டு, தொடக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் அதிகபட்ச தளப்பரப்பை அடைவதற்கு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டம்செயல்படுத்தப்படும்.
மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை62 கிலோமீட்டர் நீளமுள்ள வெளிவட்டச் சாலையின் (ORR) கிழக்குப் பகுதியில் 50 மீட்டர் அகலமுள்ள நிலம், வளர்ச்சிப் பெருவழியாக (Development Corridor) மேம்படுத்தப்படும். இந்தப் பெருவழியை அடுத்துள்ள பகுதிகளில், குடியிருப்பு நகரியம், சிப்காட் தொழிற்பூங்காக்கள், பொழுதுபோக்குப் பகுதிகள், சேமிப்புக் கிடங்குகள், தோட்டக்கலைப் பூங்காக்கள், இயற்கை உணவு பதப்படுத்தும் மண்டலம் மற்றும் தயார் நிலையில் உள்ள தொழிற்கூடங்கள் (Plug And Play) ஆகியவற்றை அமைத்திட திட்டமிடுவதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தப் பெருவழியில் முழுமையான வளர்ச்சியை அடைய, தளப்பரப்புக் குறியீடும் (FSI) உயர்த்தப்படும். திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல்,மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம், பெருநகர சென்னை மாநகராட்சி, உள்ளூர் திட்டக் குழுமங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும்.
பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்திற்காக (நகர்ப்புரம்) 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறைக்கு 8,737.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.