பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில், மண்பாண்ட தொழிலாளர்கள் சட்டி, பானை போன்ற பொருட்களை செய்வதில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மூலங்குடி பகுதியில், பிரபு குடும்பத்தினர், தலைமுறை தலைமுறையாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்டி, பானை உள்ளிட்ட பொருட்களை தற்போது செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் மக்கள் மண்பாண்டங்களில் தான் சமையல் செய்து வந்தனர். தற்பொழுது கிராமப் பகுதியில் வரை எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருவதால் மண்பாண்டங்களில் பயன்பாடு குறைந்துள்ளது. மேலும் அலுமினியம் எவர்சிலர் போன்ற உலோக பாத்திரங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், மிகவும் பழங்கால, பாரம்பரியமிக்க தொழிலான மண்பாண்ட தொழில் தற்போது நலிவடைந்து வரும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கும் பெரும்பாலான மக்கள் தற்பொழுது மண்பானை பயன்படுத்தாத நிலை உள்ளது...இதனால் மண்பாண்ட தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
இதுகுறித்து, மண்பாண்ட தொழிலாளியான பிரபாகர் சொல்லும்போது, "தற்பொழுது பொங்கல் பண்டிகைக்கும் அலுமினியம் எவர்சில்வர் போன்ற பாத்திரங்களையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவதால் எங்களுக்கு தொழில் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, கரும்பு கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடைகளில் மூலம் வழங்குவது போல், எங்களிடமிருந்து மண்பாண்டகளை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் மண்பாண்டம் செய்ய மண் எடுப்பதற்கு உரிமம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.