நிழல் தரும் மரங்களை வளர்ப்பதும் காப்பதும் நமது கடமை: பழனிசாமி!!

நாட்டின் கலாசாரத்தில் மரம் இன்றியமையாதது; மரங்களை தெய்வமாக வழிபடுவது நமது கலாசாரம் என சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேச்சு!!

Last Updated : Sep 15, 2019, 08:12 PM IST
நிழல் தரும் மரங்களை வளர்ப்பதும் காப்பதும் நமது கடமை: பழனிசாமி!! title=

நாட்டின் கலாசாரத்தில் மரம் இன்றியமையாதது; மரங்களை தெய்வமாக வழிபடுவது நமது கலாசாரம் என சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேச்சு!!

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் ஈஷா அறக்கட்டளையின் பசுமை கரங்கள் இயக்கம் சார்பில் காவேரி கூக்குரல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், மரங்கள் இருப்பதால்தான் ஓசோன் பாதுகாக்கப்படுகிறது என்றும், நீர்வளம் பெருகுகிறது என்றும் முதலமைச்சர் கூறினார். தமிழக அரசு இதுவரை பல்வேறு திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மரங்கள் நட்டுள்ளதாகவும், தேக்கு மரக்கன்றுகள் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 2.40 லட்சம் எண்ணிக்கையில் நடப்பட்டுள்ளன என்றும் முதல்வர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பனை விதைகள் தமிழகத்தில் நடப்பட்டுள்ளது என்றும், இதேபோல் நடப்பாண்டில் இரண்டு கோடியே 50 லட்சம் பனை விதைகள் நட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மரங்களை நட்டால் தமிழகம் பசுஞ் சோலைவனமாகும் என்றும், 242 கோடி மரம் நடும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார். இந்த நடவடிக்கைக்கு சத்குருவிற்கு தமிழக அரசு துணை நிற்கும் முதல்வர் கூறினார்.

காவிரியைப் பாதுகாக்கும் தமிழக அரசின் நடவடிக்கை குடியரசுத் தலைவரின் நாடாளுமன்ற உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், வைகை, பாலாறு உள்ளிட்ட ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாடு முழுவதும் தடை செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். மழை நீர் சேமிப்பு திட்டம் போல, மரம் வளர்க்கும் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். 

 

Trending News