"கோவிலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகத்தைவிட ஹோட்டலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகம் அதிகப் பிரகாசமாக இருக்கிறது. என் சிறு வயதில் இது என்னை மிகவும் குழப்பியிருக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது, இல்லையா?" - "பணம் துன்பத்தை வரவழைக்கிறதா?" என்ற ஒரு தியான அன்பரின் கேள்விக்கு சத்குரு அவர்களின் சுவாரஸ்யமான பதில்...
பணம் உங்களுக்குத் துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்குத் துன்பத்தை வரவழைக்கிறது. பணம் உங்கள் வாழ்க்கையில் நுழையும்போது முட்டாள்தனமும் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த நிலையில் துன்பமும் சேர்ந்து வரலாம். அதற்காக பணம் வந்துவிட்டாலே துன்பமும் வந்தாக வேண்டும் என்று கிடையாது. பணம் உங்களுக்கு நிச்சயமாக வசதிகளைக் கொண்டு வருகிறது.
ஆனால் வசதிகள் ஏன் துன்பமாக மாற வேண்டும்? நாம்தானே வசதியை தேடினோம்? அப்படியிருக்க, நாம் விரும்பியதே நமது துன்பத்திற்கு ஏன் காரணமாக வேண்டும்? ஏதோ ஒன்று நமது கையில் இருக்கும்போது, அதனுடன் சேர்ந்த மற்றொன்றை முழுவதுமாக மறந்து விடுகிறோம். மனிதர்களின் பெரிய பிரச்சினை இது. காலையில் சாப்பிட உட்கார்கிறீர்கள். ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கிறது. இப்போது மற்றவற்றை மறந்து விடுகிறீர்கள். ஊறுகாய், ஊறுகாய், ஊறுகாய் மட்டுமே வயிறு நிரம்ப சாப்பிடுகிறீர்கள். மாலையே பிரச்சினை ஆரம்பித்து விடுகிறது. அடுத்த நாள் காலை வரை கூட அது காத்திருக்காது.
அதே போலத்தான் செல்வமும் செழுமையும். அவை உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வரும்போது மிகவும் அழகாக இருக்கும். உங்களிடம் போதுமான பணம் இருந்தால் அடுத்த நாள் வேலை செய்வதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் விரும்பினால் கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் உட்கார்ந்து விடலாம். இன்று சம்பாதித்தால்தான் நாளை உணவு என்ற நிலையிலிருப்பவர், விரும்பினாலும் அப்படி தியானத்தில் உட்கார முடியாது. எனவே பணம் உங்களுக்கு துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்கு துன்பத்தை வரவழைக்கிறது.
ALSO READ | கேன்சர் குறித்த சத்குருவின் செய்தி: நவீன சமூகத்தின் நோய்!
ஏராளமானோர் தினமும் கோவில், மசூதி, மாதா கோவிலுக்குச் செல்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து திரும்பிவரும்போது அவர்கள் முகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் முகம் மகிழ்ச்சியாக மாறியிருக்கிறதா? நான் 11 வயதாக இருக்கும்போது இது என்னை மிகவும் குழப்பியிருக்கிறது. அந்த வயதில் நான் ஒரு பெரிய கோவில் வாசலில் நிறைய நேரம் உட்கார்ந்து கொண்டு கோவிலிலிருந்து திரும்பி வருபவர்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். கடவுளைப் பார்த்து வந்த பின் அவர்கள் முகம் பிரகாசமாக மாறியிருக்கிறதா என்று கவனிப்பேன். கோவிலிலிருந்து திரும்பிவரும் போது ஒருவருக்கொருவர் 'கிசுகிசு'வோடு திரும்பி வருவதைத்தான் அதிகம் கவனித்திருக்கிறேன். கடவுளைப் பற்றி பேசுவதை விட கோவிலில் பார்த்த மற்ற மனிதர்களைப் பற்றிக் கிசுகிசுவோடு வெளிவருவதைத்தான் கவனித்தேன். அல்லது அவர்கள் விட்டுச் சென்ற செருப்பு வேறு யாரோடாவது நடந்து போய் விடடால் இந்த உலகத்தையே, ஏன் கடவுளைக் கூட சபிக்க ஆரம்பித்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்.
ALSO READ | ஈஷாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக மேலும் ரூ.2.3 கோடி வழங்கிய சத்குரு
கோவிலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகத்தைவிட ஹோட்டலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகம் அதிகப் பிரகாசமாக இருக்கிறது. அதிக மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வெளிவருகிறார்கள். இது மிகவும் வெட்கக் கேடானது, இல்லையா? தெய்வீகத்தை விட தோசை அவர்களுக்கு அதிக திருப்தியைத் தந்திருக்கிறது. எனவே தெய்வீகமா, செழுமையா, தோசையா என்பதல்ல கேள்வி. மனிதர்கள் விஷயங்களை மோசமாகக் கையாண்டால் எப்படியும் துன்பம் வருகிறது என்பதைப் பாருங்கள்.
துன்பம் பணத்தால் வரவில்லை. பணம் உங்களின் சட்டைப் பைக்குள் போவதற்கு பதிலாக உங்கள் தலைக்குள் போனதால்தான் துன்பம் வருகிறது. அதை சட்டைப் பைக்குள் மட்டும் வைத்துச் கொண்டால் அது மிகவும் அற்புதம். பணம் இருக்க வேண்டிய இடம் அதுதான், உங்கள் தலை இல்லை. பணத்தை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு இவ்வுலகில் அற்புதமான பணிகள் பலவற்றை செய்யமுடியும்.
உலகில் மனிதர்களுக்கிடையே இதுதான் ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறது. உலகின் மேற்கு பகுதியில் உள்ளவர்கள் உள்நிலையை சரியாகக் கையாள்வதில்லை. அமெரிக்க நாட்டில் 40 சதவீத மக்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு முறையாவது மன அழுத்தத்திற்கான மருந்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் வெளியில்தான் அனைத்தும் இருக்கிறது என நினைத்து உள்சூழ்நிலையைக் கவனிக்க மறந்து விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு வாழ்க்கை ஒரு குழப்பமாகி விடுகிறது
இங்கு, இந்தியாவில் வேறு விதமான தவறு நடக்கிறது. சொர்க்கம்தான் எல்லாமே என்று நினைத்து தற்போது வாழும் வாழ்க்கையை மறந்து விடுகிறார்கள். இங்கு பெரிய கோவிலைக் கட்டுவார்கள், ஆனால் சரியான கழிவறை இருக்காது. இது இந்தியர்களின் பிரச்சினை. எல்லாமே சொர்க்கத்தில் இருக்கிறது என்று நினைத்து தற்போது தாங்கள் வாழும் உலகை மறந்து விடுகிறார்கள், எனவே அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். எனவே எப்போதும் இந்த இரண்டிற்கும் இடையிலான ஒரு சமநிலையைக் கொண்டு வர வேண்டும்.
ALSO READ | பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பது சரியா? – சத்குரு பதில்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR