தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனையொட்டி மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி விடுமுறை வந்ததால் அதன் தொடர்ச்சியாக நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு அரசு விடுமுறை நாளாக அறிவித்தது. இதன்காரணமாக உள்ளாட்சி தினமான நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது, அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதன்படி நவம்பர் 23 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 தொழிலாளர்கள் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் ஆகிய 6 நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். இந்த முறை நவம்பர் 1 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் நவம்பர் 23 ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டும். கிராம ஊராட்சிக்குட்பட்ட வார்டுகளில் காலை 11 மணியளவில் சுழற்சிமுறையில் கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும். கிராம சபை கூட்டம் நடைபெறும் இடம், நேரம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். மதச்சார்புள்ள எந்தவொரு இடத்திலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படக்கூடாது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம சபை கூட்டத்தில் தூய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியன குறித்தும் விவாதிக்க வேண்டும். இந்தக் கூட்ட நிகழ்வுகளை 'நம்ம கிராம சபை' செயலியில் பதிவிட வேண்டும். அதுகுறித்த அறிக்கையை கிராம சபைக் கூட்டம் நடைபெறும் அன்றைய தினமே ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டம் முக்கியத்துவம்
கிராம சபை கூட்டம் என்பது கிராமத்தின் நிர்வாக வெளிப்படைத் தன்மை மற்றும் கிராம நிர்வாகத்தில் பொதுமக்களின் பங்கேற்பு ஆகியவற்றை உறுதி செய்யும். இந்த கூட்டத்தின்போது கிராமத்தின் பொது பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதுடன், பொதுத்தீர்மானங்களும் நிறைவேற்றப்படும். அத்துடன் இதுவரை செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து கேள்வி கேட்கலாம். தணிக்கைக்கு உட்படுத்தலாம். கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் மத்திய மாநில அரசுகள் கூட மீற முடியாது. ஒரு திட்டம் வேண்டாம் என கிராம மக்கள்கூடி கிராம சபை மூலம் முடிவெடுக்க முடியும். மதுக்கடை வேண்டாம் என்று கூட கிராம சபை மூலம் தீர்மானம் நிறைவேற்றி கடைகளை அகற்ற முடியும். புதிய கடைகள் வராமல் தடுக்க முடியும். கிராம சபை கூட்டத்தின் தலைவராக கிராம ஊராட்சி மன்ற தலைவர் இருப்பார். அவர் இல்லாதபோது துணைத் தலைவர் இருப்பார். அவரும் இல்லையென்றால் வார்டு உறுப்பினர்களில் யாரேனும் தலைமையேற்று கிராமசபை கூட்டத்தை நடத்தலாம்.
மேலும் படிக்க | Ration Card | ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் சிக்கலா? இதை பாலோ பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ