முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ், இன்று பணி ஓய்வு பெறுகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி ராமமோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் அவருடைய நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம், பல கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, ராமமோகன ராவ் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்றார். ராமமோகன ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு அவருக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இன்றுடன் ராமமோகன ராவ் தனது பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.