சென்னை: அதிமுக அமைச்சரவையில் இருந்த போது வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
தற்போது திமுக எம்.எல்.ஏ-வாக இருக்கும் செந்தில்பாலாஜி, அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 க்கு மேற்பட்டவோர்களிடம் கிட்டத்தட்ட சுமார் 95 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு, பணம் மோசடி செய்துள்ளதாக அவர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் இருவருக்கும் சொந்தமான வீடு, அலுவலகம் போன்ற பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதாவது அவர்களுக்கு சொந்தமான சென்னை, கரூர், திருவண்ணாமலை மற்றும் கும்பகோணத்தில் உள்ள இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் லேப்டாப், வங்கி காசோலைகள், நகைகள் உட்பட பல பொருட்களை போலீஸார் கைப்பற்றினர்.
இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் இன்று வழங்கியது. பாஸ்போர்ட்டை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். அதேநேரத்தில் தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.