கடும் எதிர்ப்புக்கு பின்னர் தூத்துக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனு ஏற்கப்பட்டது!
தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழிசை சவுந்தரராஜன் அவர்களது வேட்புமனு மீது இன்று பரிசீலினை நடத்தப்பட்டது. பரிசீலினையின் போது திமுக எதிர்ப்பு தெரிவித்தால் நீண்ட நேர எதிர்ப்புக்கு பின்னர் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி கடந்த 19-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மனுதாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் கடைசி நாளான நேற்று அனைத்து தொகுதிகளிலும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.
அந்தவகையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி., பா.ஜனதா சார்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்பட 48 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனு பரிசீலனை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் இன்று நடைபெற்றது.
பரிசீலினையின் போது தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனுவை பரிசீலனை செய்ய திமுக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அவர் இயக்குனராக உள்ள விவரத்தை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு மீதான பரிசீலனை மதியம் 1.30 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன்பின்னர், வேட்பு மனு பரிசீலனை தொடங்கியபோதும் திமுக தரப்பில் மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, தமிழிசையின் மனுவில் உள்ள அனைத்து அம்சங்களையும் தீவிரமாக பரிசீலனை செய்தனர். அதன்பின்னர் அவரது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக்கொண்டார்.