தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு நடத்தியுள்ளார்!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது குறித்து தமிழகத்தில் பல கட்சி தலைவர்களும் திடீர் சந்திப்புகள் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடைப்பெற்ற சந்திப்புகளின் விளைவாக இதுவரை கிட்டத்தட்ட கூட்டணி கட்சிகள் முடிவாகி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருகின்றன.
தமிழகத்தை பொருத்தவரை இரண்டு பிரதான கட்சிகள், இரண்டு தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக-பாஜக தலைமையிலான ஒரு கூட்டணி, காங்கிரஸ்-திமுக தலைமையிலான மற்றொரு கூட்டணி என தமிழகத்தில் இரண்டு கூட்டணி உறுதியாகி கூட்டணியில் இதற கட்சிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நடிகராக இருந்து அரசியல் களத்தில் குதித்த விஜயகாந்த் அவர்களின் தேமுதிக கட்சியினை இரு கூட்டணி கட்சிகளும் தங்கள் பங்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னதாக நேற்று பாஜக அமைச்சர் பியுஷ் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்துள்ளார். இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்...
"விஜயகாந்த எனது நெடுங்கால நண்பர், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று நாடு திரும்பிய அவரை நட்பு ரீதியாக சந்தித்தேன். அதே வேலையில் நாட்டு நடப்பை பற்றியும் பேசினோம். நாட்டின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன். இதை தவிர தற்போதைக்கு வேறு எதுவும் கூற இயலாது" என தெரிவித்து சென்றார்.
அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக-விற்கு கோரப்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள இச்சந்திப்பு தேமுதிக காங்கிரஸ்-திமுக கூட்டணியில் சேர்வதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.