Widow pension scheme | கணவனை இழந்த பெண்கள் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறலாம்.
Indira Gandhi National Widow Pension | இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் மூலம் கணவனை இழந்த பெண்கள் எப்படி ஓய்வூதியம் பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் (IGNWPS) இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது சமூகத்தின் ஏழைக் குடும்பத்தின் (பிபிஎல்) விதவைகளுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கான பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டமாகும்.
40 வயது முதல் 79 வயது வரை உள்ள விதவைகளுக்கு மாதம் ரூ.300/- ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.500/-.வழங்கப்படுகிறது.
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டத்தின் (Indira Gandhi National Widow Pension) கீழ் உள்ள தகுதிகள் என்னவென்றால் விண்ணப்பதாரர் 40-79 வயதுக்குட்பட்ட விதவையாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களின்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் பெண்கள் மறுமணம் செய்தால் ஓய்வூதியம் நிறுத்தப்படும். அதேபோல் வறுமை கோட்டின் அளவுகோல்களை கடந்தாலும் ஓய்வூதியம் கிடைக்காது.
இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டத்துக்கு ஆன்லைன், ஆப்லைன் என இரண்டு விதங்களிலும் விண்ணப்பிக்கலாம். UMANG செயலி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
https://web.umang.gov.in/web_new/home என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். மொபைல் எண் மற்றும் OTP ஐப் பயன்படுத்தி உள்நுழையலாம். அங்கு NSAP என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். "ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.
அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து, ஓய்வூதியம் செலுத்தும் முறையைத் தேர்வுசெய்து, புகைப்படத்தைப் பதிவேற்றி, "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவும். தேவையான ஆவணங்கள் என்னவென்றால், கணவரின் இறப்புச் சான்றிதழ், விதவை சான்றிதழ், பிபிஎல் அட்டை ஆகியவற்றை கொடுக்க வேண்டும்
வயதுக்கு, பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளிச் சான்றிதழை கொடுக்கலாம். அவை இல்லை என்றால் ரேஷன் கார்டு மற்றும் EPIC ஆகியவற்றை ஆவணமாக கொடுக்கலாம். சரியான ஆவணம் இல்லை என்றால், வயதுச் சான்றிதழை அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலரிடம் சான்று பெற்று சமர்பிக்கலாம்.