விவசாயம் செய்யும் நான் முதல்வர் நாற்காலியில் அமரக்கூடாதா? என திமுக தலைவர் முக ஸ்டாலினிடன் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்!
வேலூர் மக்களவைத் தொகுதியில் அடுத்த மாதம் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிரச்சாரத்தின் ஒருபகுதியாக இன்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் வேலூர் தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்டது ஏன்? கட்டுக்கட்டாக வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கிவைக்கப்பட்டதால் இந்தத் தேர்தல் நிறுத்தப்பட்டது.
திரு ஸ்டாலின் அவர்களே ஆதாரம் எல்லாம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இந்த வழக்குகள் எல்லாம் விசாரணைக்கு வரும் தயாராக இருங்கள் என எச்சரித்துள்ளார்.
மேலும் தான் என்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன் எனவும், விவசாயி ஆன தான் முதல்வர் ஆகக்கூடாதா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இரண்டு கண்களாக பாவித்து இந்த தமிழக அரசு காத்து வருகிறது என குறிப்பிட்ட அவர், இறைவன் எங்கள் பக்கம் இருக்கின்றார். இரு பெரும் தலைவர்கள் மேல் இருந்து எங்களை ஆசீர்வதித்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலேயே மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. நாட்டு மக்களுக்காக எவ்வளவோ போராடிய தலைவர்கள் இருக்கும்போது, உதயநிதிக்கு ஏன் பட்டாபிஷேகம் செய்ய துடிக்கிறார்? என கேள்விகளை அடுக்கினார்.
பின்னர் பிரச்சாரத்திற்கு இடையில் மழை குறுக்கிட்டதால் அவசர அவசரமாக பேச்சை நிறைவு செய்த முதல்வர் பழனிசாமி, கே.வி.குப்பம் தனி தாலுகாவாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.