ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
“நவராத்திரி விழாவினையும், விஜயதசமி திருநாளையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் தங்கள் வாழ்வில் ஆற்றலில் மிகுந்து, செல்வத்தில் சிறந்து, கல்வியில் உயர்ந்துவிளங்கிட வேண்டி நவராத்திரி பண்டிகையின் போது, ஆற்றலின் வடிவமாம் மலைமகளையும், செல்வத்தின் வடிவமாம் திருமகளையும், அறிவின் வடிவமாம் கலைமகளையும் பக்தியுடன் வழிபட்டு, வண்ணமிகு பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து நவராத்திரி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் தாங்கள் செய்யும் தொழிலே தெய்வமென மதித்து, தொழிலுக்கு அத்தியாவசியமாக விளங்குகின்ற கருவிகளையும், இயந்திரங்களையும் பூஜைக்குரிய பொருட்களாக வைத்து, மென்மேலும் தொழில் வளம் பெருகிட அன்னையை வணங்கிடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும். கடின உழைப்பே, வறுமையை போக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் என்ற உழைப்பின் சிறப்பினை போற்றும் திருநாளாகவும் இன்னாள் விளங்குகிறது.
வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளன்று கல்வி, கலை, தொழில்களை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்ற இறை நம்பிக்கையோடு மக்கள் புதிய முயற்சிகளுக்கு வித்திட்டு நவராத்திரி பண்டிகையின் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை கொண்டாடி மகிழ்வார்கள்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அன்னையின் அருளால் அனைத்து நலங்களும் வளங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.