போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படு வருவதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
13_வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்கிட வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்துக்கு அரசே பொறுப்பேற்று அதனை ஈடுசெய்ய வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை நிர்வாக பிரதிநிதிகளுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்மணி உள்ளிட்டோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டியதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து, இன்று காலை முதல் பேருந்துகள் சீராக இயக்கப்பட்டு வருதால் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.