ஜமைக்கா: இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி. பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணி பலமான இந்திய அணியை எவ்வாறு எதிர்க்கொள்கிறது என்று பார்போம்.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரையும் இந்திய அணி வென்றது.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களும் எடுத்தன. அடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 100 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
அந்த வெற்றி மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்தநிலையில், இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் இன்று தொடங்க உள்ளது.
ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், 2வது போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி ஆடக்கூடும். இந்த போட்டி ஒருவேளை டிராவில் முடிந்தால், 1-0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றும். இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன், துணை கேப்டன், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்த வரை பேட்டிங் சரியாக இல்லை. பந்துவீச்சில் மட்டும் ஷனோன் கேப்ரியல், கெமார் ரோச் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்ட் தொடரை சமன் செய்யலாம். பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணி பலமான இந்திய அணியை எவ்வாறு எதிர்க்கொள்கிறது என்று பார்போம்.
இந்த டெஸ்ட் தொடர் உலக சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் உள்ளடக்கியதாகும். முதலாவது டெஸ்ட் வெற்றியால் 60 புள்ளிகளை குவித்த இந்திய அணி, இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று 60 புள்ளிகளை சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.