விராட் கோலியின் ஸ்பெஷல் சதம்... இருந்தாலும் வருத்தத்தில் ரசிகர்கள் - என்ன காரணம்?

Virat Kohli Runout: 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி, 2018ஆம் ஆண்டுக்கு பின் அந்நிய மண்ணில் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இருப்பினும், அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழந்தனர். இதன் காரணத்தை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 22, 2023, 09:32 AM IST
  • இந்தியா 438 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
  • விராட் கோலி தனது 76ஆவது சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.
  • ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் அரைசதம் அடித்து ஆறுதல்.
விராட் கோலியின் ஸ்பெஷல் சதம்... இருந்தாலும் வருத்தத்தில் ரசிகர்கள் - என்ன காரணம்? title=

Virat Kohli Runout: இந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளை இந்தியா அங்கு விளையாடுகிறது. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் போட்டியை வென்று முன்னிலை வகிக்கிறது. 

500ஆவது போட்டியில் சதம்

அந்த வகையில், நேற்று முன்தினம் (ஜூலை 20) தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் - ரோஹித் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஜெய்ஸ்வால் 57 ரன்களுக்கும், ரோஹித் 80 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கில் 10 ரன்களிலும், ரஹானே 8 ரன்களிலும் நடையைக்கட்டினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை எடுத்தது. 

இதை தொடர்ந்து, விராட் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் நேற்றைய இரண்டாவது நாளை தொடங்கினர். விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடி வரும் நிலையில், சீராக வேகத்தில் ரன்களை சேர்த்தார். கிரிக்கெட் வரலாற்றில், 500ஆவது போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெற்றிருந்த நிலையில், நேற்று சதம் அடித்ததன் மூலம் சதம் அடித்த முதல் வீரரும் ஆனார். 

5 வருடங்களுக்கு பின்

அதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி 5ஆவது இடத்தை பிடித்தார். மேலும், 2018ஆம் ஆண்டுக்கு பின் அந்நிய மண்ணில் கோலி அடித்த முதல் டெஸ்ட் சதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 5 வருடங்களுக்கு பின் இந்த டெஸ்ட் சதம் அவரிடம் இருந்து வந்துள்ளது.

மேலும் படிக்க | இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? பிசிசிஐ எடுக்கும் முக்கிய முடிவு!

விராட் கோலி இத்தகைய சாதனை படைத்திருந்தாலும், அவரின் ரசிகர்கள் இறுதியில் மிகவும் சோகத்திற்கு ஆளாக்கப்பட்டனர். விராட் கோலி 121 ரன்கள் எடுத்தபோது அல்ஸாரி ஜோசப்பால் ரன் அவுட்டாக்கப்பட்டார். அதாவது, விராட் கோலி லெக் சைடில் தட்டிவிட்டு ஒரு ரன்னை எடுத்துவிடலாம் என ஓட ஆரம்பித்து, ஜடேஜாவையும் அழைத்தார், விராட் கோலியின் அழைப்பால் ஓடத் தொடங்கினார்.

மொத்தமே 3 ரன்-அவுட் தான்

ஆனால், இரண்டு, மூன்று அடிகள் வெளியே வந்ததும் கோலி ஓடலாமா, வேண்டாமா என சற்று குழம்பிவிட்டார். இருப்பினும் ரன் ஓடிய விராட் பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட்டாக்கப்பட்டு வெளியேறினார். விராட் கோலி சதம் அடித்தாலும் இது துரதிருஷ்டமாகவே கருதப்படுகிறது. ஏனெனில், விராட் கோலி தனது டெஸ்ட் வாழ்க்கையில் இந்த ரன்-அவுட்டை சேர்க்காமல் இரண்டு முறை தான் அவுட்டாகியுள்ளார். 

2012, 2020ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் தான் கோலி இரண்டு முறையும் ரன் அவுட்டாகியுள்ளார். விராட் கோலி தனது 76ஆவது சர்வதேச சதத்தை நேற்று பதிவு செய்ததால், அவரது ரசிகர்கள் குஷியில் இருந்தனர். கடைசியில் அவர் ரன்அவுட்டாகி வெளியேறியது துரதிருஷ்டவசமானது. 

பின்னர் அஸ்வினின் அரைசதத்தால் இந்திய அணி 438 ரன்களை எடுத்தது. ரோச், வாரிகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் இரண்டாவது நாள் ஓட்ட நே 41 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 86 ரன்களை எடுத்துள்ளது. மேலும் இந்தியாவை விட 352 ரன்கள் அந்த அணி பின்தங்கியுள்ளது. 

மேலும் படிக்க | டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் ஸ்டுவர்ட் பிராட் சாதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News