ஐபிஎல் 2017: திரிபாதி அதிரடியால் கொல்கத்தாவை வென்றது புனே

Last Updated : May 4, 2017, 09:53 AM IST
ஐபிஎல் 2017: திரிபாதி அதிரடியால் கொல்கத்தாவை வென்றது புனே title=

நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராகுல் திரிபாதி(93 ரன்கள்) அதிரடியால் புனே அணி ஏழாவது வெற்றியை பெற்றுள்ளது. 

கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின. 

கொல்கத்தா அணியில் விக்கெட் கீப்பர் உத்தப்பாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டார்.டாஸ் வென்ற புனே கேப்டன் ஸ்டீவன் சுமித், முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தார். தொடக்க வீரர் சுனில் நரேன்(0 ரன்), அடுத்து வந்த ஷெல்டன் ஜாக்சன்(10 ரன்) சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை எதிர்கொண்ட போது, ஸ்டம்பை மிதித்து ‘ஹிட்விக்கெட்’ ஆனார். 

புனே பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் திணறியது கொல்கத்தா. கவுதம் கம்பீர் 24 ரன்களில் ஆட்டமிழக்க, யூசுப் பதான் 4 ரன்னில் வந்த வேகத்தில் நடையை கட்டினார். மணிஷ் பாண்டே மட்டும் தாக்குப்பிடித்து 37 ரன் எடுத்தார். கிராண்ட் ஹோம் 36 ரன், சூர்யகுமார் யாதவ் 30 ரன் எடுக்க, 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. 

புனே தரப்பில் உனட்கட், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து 156 ரன்கள் இலக்கை நோக்கி புனே அணி ஆடியது. ரஹானே (11 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (9 ரன்), மனோஜ் திவாரி (8 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்தாலும் மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரர் தொடக்கம் முதலே அதிரடியில் ஈடுபட்ட ராகுல் திரிபாதி கொல்கத்தாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். அவர் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

ராகுல் திரிபாதி 52 பந்துகளில் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். புனே அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வோக்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். திரிபாதி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

 

 

Trending News