துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தூத்துக்குடி சென்றுள்ள ரஜினிகாந்த் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரம் அறிவித்துள்ளார்!
கடந்த 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100_வது நாளாக தொடர் போரட்டம் 144 தடை உத்தரவை மீறி நடைபெற்றது. இதனால் போலீசாரும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் சுமார் 13 பேர் சூட்டு கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சமூக வலைத்தளம் மூலம் கடும் கண்டனங்கள் பதிவு செய்த நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில், அவர் தற்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களை சந்திக்க தூத்துக்குடி வந்துள்ளார். அங்கு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 48 பேரை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவியும், அதேபோல காயமடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் நிதியுதவி அளிக்கபடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
Tamil Nadu: #Rajinikanth arrives at general hospital in #Thoothukkudi to meet those injured during anti-#Sterlite protests pic.twitter.com/wtdeBqwtAi
— ANI (@ANI) May 30, 2018
அரசியல் பிரவேசம் அறிவிப்புக்கு பின்னர் ரஜினி மேற்கொள்ளும் முதல் பயணம்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற அவர், அங்கிருந்து திறந்த வாகனம் மூலம் கை அசைத்தபடியே தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி பயணம் செய்வதற்கு முன்பாக போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளேன். மக்கள் என்னை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும், மேலும் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினால் எனக்கு பெரும் மகிழ்ச்சி எனவும், திமுகவும், அதிமுகவும் ஒருவரையொருவர் குறைக் கூறிக்கொள்வது என்பது வெறும் அரசியல் மட்டுமே என ரஜினிகாந்த் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.