தெலுங்கில் ஹிட் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் நாக சைதன்யா முதல் முறையாகத் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இது வெங்கட் பிரபுவின் முதல் தெலுங்குப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபுவின் படங்கள் தனித்துத் தெரியும். புதிய அலை சினிமா இயக்குநர்களின் பட்டியலில் ஜாலியான படங்களைக் கொடுக்கும் இயக்குநராகப் பெயர் எடுத்துள்ளார். மங்காத்தாவும், மாநாடு படமும் அவரது திரையுலக வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்கவை. மாநாடு படத்தின் மூலம் ஜாலி, கேலிக்கெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சமூகப் பொறுப்புள்ள இயக்குநராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது. அதற்குப் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மன்மத லீலை படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் வெங்கட் பிரபு தெலுங்கு சினிமாவிலும் கால் பதிக்கிறார். அவர் இயக்கும் முதல் தெலுங்குப் படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிக்கிறார். இரு மொழிப் படமாக இது உருவாகவுள்ளது. இப்படம் வெங்கட் பிரபுவுக்கு 11-வது படம், நாக சைதன்யாவுக்கு 22-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் கமர்ஷியல் அம்சத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் மார்க்கெட்டை விரிவுபடுத்தும் திட்டத்தில் வெங்கட் பிரபு இந்த முடிவை எடுத்துள்ளார்.
மேலும் படிக்க | விஜய்- ஷாருக்கான் கூட்டணியில் புதிய படம்?! - வாய் பிளக்கும் திரையுலகம்!
நாக சைதன்யா இந்த வருடத்தில் பங்கார ராஜு என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்து, “ Thank you” என்ற அவரது அடுத்த படம் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் வேளையில், வெங்கட் பிரபு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாக சைதன்யா தமிழில் அறிமுகம் ஆகவேண்டும் என்று பல வருடங்களாகத் திட்டமிட்டு, கதைகள் கேட்டு வந்தார். ஆனால், எதுவும் செட்டாகவில்லை. நல்ல ஜாலியான ஒரு படத்தில் அழுத்தமான முத்திரை பதிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தார்.
இந்தச் சூழலில்தான் வெங்கட் பிரபு கூறிய கதை நாக சைதன்யாவுக்குப் பிடித்துவிட்டது. இந்நிலையில் அவர் தமிழில் முதல் முறையாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். நாகார்ஜுனா, அமலா என அவரது பெற்றோர் தமிழ்ப் படங்களில் நடித்து வந்தனர். இதயத்தைத் திருடாதே, ரட்சகன், பயணம், தோழா ஆகிய படங்களின் மூலம் நாகார்ஜுனாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அமலா முதலில் தமிழ் சினிமாவில்தான் அறிமுகம் ஆனார். மைதிலி என்னைக் காதலி, மெல்லத்திறந்தது கதவு படங்களில் நடித்த பிறகே தெலுங்கு சினிமா வாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து ரஜினி, கமலுடன் நடித்தார். இந்நிலையில் தமிழ் சினிமா சென்டிமென்ட் தனக்கும் சாதகமாக அமையும் என்று நம்புகிறார் நாக சைதன்யா.
டோலிவுட்டில் தொடர்ந்து படங்களை எடுத்து வரும் தயாரிப்பு நிறுவனம் Srinivasaa Silver Screens, தொடர்ந்து பல படங்களைக் கைவசம் வைத்துள்ளது. அதில் ராம் பொதினேனி உடைய “ தி வாரியர்”, போயபட்டி ஶ்ரீனு-ராம் இணையும் படத்துடன் தற்போது வெங்கட் பிரபு - நாக சைதன்யா இணையும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஶ்ரீனிவாசா சித்தூரி படத்தைத் தயாரிக்க, பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார்.
இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யாவின் திறமைக்குத் தகுந்த படியும், தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும் இக்கதையை உருவாக்கியுள்ளார். முக்கியமான நடிகர்களும், பிரபலமான தொழில்நுட்பக் கலைஞர்களும் சேர்ந்து ஒரு கமர்சியல் எண்டர்டெயினராக, இப்படம் உருவாக்கப்படவுள்ளது. படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பூஜையுடன் தொடங்கியது தளபதி 66 - ஒருவாரம் சென்னையில் படப்பிடிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G