ரஜினி சமூக விரோதிகளை ஆதரிக்கிறார்... படவிழாவில் திருமுருகன் காந்தி அதிரடி!

யோகி ஆதித்யநாத் என்ற சமூக விரோதி காலில் ரஜினிகாந்த் விழும்போது அதை நாங்கள் கேள்வி கேட்போம் என்றும் சமூக விரோதியை அவர் ஆதரிப்பதாகவே எடுத்துக் கொள்வோம் என்றும் 'சமூக விரோதி' பட விழாவில் திருமுருகன் காந்தி பேசியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 10, 2023, 02:19 PM IST
  • சமூக விரோதி எங்கிருக்கிறான்? நம்மிடையே தான் இருக்கிறான் - நாஞ்சில் சம்பத்
  • ஸ்டெர்லைட் பிரச்சினையில் ரஜினி அப்படிச் செய்திருக்கக் கூடாது - திருமுருகன் காந்தி
  • மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்காத ரஜினி, கமல், விஜய் சமூக விரோதிகள் - குணாஜி
ரஜினி சமூக விரோதிகளை ஆதரிக்கிறார்... படவிழாவில் திருமுருகன் காந்தி அதிரடி! title=

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் 'சமூக விரோதி'. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று (அக். 9) வெளியிடப்பட்டன. இவ்விழாவில் பல்வேறு அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்

குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட்  மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன், நடிகர்கள் லொள்ளு சபா ஜீவா, இமான் அண்ணாச்சி, விஜய் விஷ்வா, சௌந்தரராஜா, சந்திரசேகரா, சிங்கப்பூர் தொழில் ஆலோசகர் ஜவஹர் அலி, படத்தின் இயக்குநர் சியோன் ராஜா, கதாநாயகன் பிரஜின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விவாத களமான பட நிகழ்ச்சி

தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி பேசும்போது," இந்த நாட்டின் சமூக விரோதிகள் யார் தெரியுமா ?" என்று தொடங்கியவர் ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து நடிகர்களையும் குற்றம் சாட்டினார். மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்காத இவர்கள் சமூக விரோதிகள் தான் என்று அவர் பேசியதைத் தொடர்ந்து நடிகர் சௌந்தரராஜா பேசினார். அப்போது "எதற்கெடுத்தாலும் திரைப்பட நடிகர்களைக் குற்றம் சாட்டுவதை முதலில் நிறுத்துங்கள். அவர்கள் மக்களை மகிழ்ச்சியூட்டுவதற்காகப் படங்களில் நடிக்கிறார்கள். சம்பளம் பெறுகிறார்கள். எதற்கெடுத்தாலும் ஏன் அவர்களை உள்ளே இழுத்துக் கொண்டு வருகிறீர்கள்?" என்றார்.

அதன் பிறகு இந்த நிகழ்ச்சியில் விவாதம் வெடித்து, பரபரப்பான சூழல் நிழவியது. அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, "நான் குமரி மண்ணில் இருந்து சென்னைக்கு இந்தப் படத்தை வாழ்த்துவதற்காக வந்தேன். படத்தின் இயக்குநர் சியோன் ராஜா நிறைய வாசிக்கிறவன், அது மட்டும் அல்ல நிறைய யோசிக்கிறவன். இன்று சாதாரண உப்புக்கல்லாகத் தெரிகிற சியோன் ராஜா இந்தப் படத்திற்குப் பின் வைரமாக மாறுவான்.

மேலும் படிக்க | விஜய்யின் 'லியோ' படத்தில் உருவாகி உள்ள புதிய சிக்கல்! குழப்பத்தில் திரையரங்குகள்!

'சமூக விரோதி நம்மிடையே இருக்கிறான்'

இங்கே ஒருவர் அறச்சீற்றத்தை வெளிப்படுத்திப் பேசினார். பொதுவெளியில் பேசும்போது யார் மனமும் புண்படாத வகையில் பேசுவது நாகரிகம் ஆகும். சமூக விரோதி எங்கிருக்கிறான்? நம்மிடையே தான் இருக்கிறான். இங்கே தீவிரவாதிகள் சமூக விரோதிகள் என்பதற்கு வேறு வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாவோ என்றாலே இங்கே அஞ்சுகிறார்கள். அவன் யார் என்பதைப் பற்றி யாருக்கும் அரசியல் அறிவு கிடையாது. 

வரலாற்றினைப் படித்தது கிடையாது. அவன் மக்களுக்காக 6000 மைல் பயணம் சென்றவன். லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் படை திரட்டியவன் மாவோ. அவன் யுத்தம் செய்தது சர்வாதிகார சாம்ராஜ்யத்திற்கு எதிராக மட்டுமல்ல போதை கலாச்சாரத்துக்கு எதிராகவும்தான். அபின் நிறைந்த கப்பலைக் கொளுத்தி அழித்து மக்களைத் தீய பழக்கத்தில் இருந்து காத்தவன். அதனால்தான் வரலாற்றில் அது அபினியுத்தம் எனப்படுகிறது. மாவோ பெயர் என்றாலே தீவிரவாதியாகப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் அவர்களின் புரிதல் இருக்கிறது. இந்தப் படத்திற்காக இயக்குநர் சீயோன் ராஜாவும் கதாநாயகன் பிரஜினும் பட்ட பாடுகளை நான் அறிவேன். அவர்களின் தொடர் ஓட்டத்தை நான் கவனித்து இருக்கிறேன். அது ஒரு சிலுவைப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

யார் சமூக விரோதிகள்?

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் டிஜிபி மோகன்தாஸ் காவல்துறைக்கு சங்கம் வைக்க வேண்டும் என்று கூறினார். அதற்காகக் காவல்துறையினர் போராடினார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு எம்ஜிஆர் ராணுவத்தை வரவழைத்துப் பயன்படுத்தினார். போராடியவர்கள் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 

குற்றம் சம்பந்தமான புலனாய்வு அறிக்கையில் மற்ற மாதங்களை விட காவல்துறையினர் சிறையில் இருந்த அந்த ஒரு மாதம்தான் கொலை, கொள்ளை குற்றங்கள் நடக்காமல் குறைவாக இருந்தது. இதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறதா யார் சமூக விரோதிகள் என்று. இந்த சமூக விரோதி படம் மூலம் புரட்சியை ஏற்படுத்துகிறாரோ இல்லையோ இயக்குநர் சீயோன் ராஜா ஓர் அதிர்வை ஏற்படுத்துவார் என்று கூறி படக்குழுவினரை வாழ்த்துகிறேன்"என்றார். 

மேலும் படிக்க | 50 வயது ராஜமெளலிக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா.. தலையே சுத்துதே

முயற்சிக்கு வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசும்போது, "நான் சில சினிமா விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். இது வித்தியாசமான விழாவாக இருக்கிறது. நிறைய அரசியல் ஆளுமைகள் வந்து இருக்கிறார்கள். மக்கள் மற்றும் பிரமுகர்கள் கொண்ட திரள் இங்கே வந்திருக்கிறார்கள்.

இந்தப் படம் சமுதாயத்திற்கு எதிரான சமூக விரோதிகள் பற்றிய மக்களிடம் எடுத்துக் கூறும் படமாக இருக்கும் என்று நான் புரிந்து கொள்கிறேன். இன்று போதைக் கலாச்சாரத்தை பரப்பி மக்களைத் தவணை முறையில் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமநிலை சமுதாய நோக்கமாக இம் முயற்சிகளுக்கு எங்களது ஆதரவு என்றும் உண்டு. இந்த முயற்சியில் வெற்றி பெற இயக்குநரை வாழ்த்துகிறேன் "என்றார்.

ரஜினி அப்படிச் செய்திருக்கக் கூடாது

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான திருமுருகன் காந்தி பேசும்போது,"திரைப்படத் துறையும் அரசியலும் சம்பந்தமில்லாதது போலும் ஒன்றை ஒன்று தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் இங்கே சர்ச்சை முன்வைக்கப்பட்டது. திரைத்துறைக்கும் அரசியல் துறைக்கும் சம்பந்தம் உள்ளது. சினிமா ஒரு புகழ்பெற்ற ஊடகமாக வளர்ந்துள்ளது. 1973இல் காட் பாதர் படத்தில் நடித்ததற்கு நடிகர் மார்லன் பிராண்டோ ஆஸ்கார் விருதுக்குத் தேர்வானார். அந்த விருது விழாவில் அவர் அந்த விருதை ஏற்காமல் ஒரு செவ்விந்திய பெண்ணை வைத்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பேச வைத்தார். அந்தப் பூர்வீக குடிகளின் ஒடுக்குமுறை பற்றிக் கவலைப்பட்டு அந்த விருதை மறுப்பதாகத் தெரிவித்தார்.

கலைஞர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும். சார்லி சாப்ளின் உலக சர்வாதிகாரி ஹிட்லரை பார்த்து உலகமே பயந்து கொண்டிருந்தபோது டிக்டேட்டர் படத்தில் அவரை நகைச்சுவைக்குரிய கேலிக்குரியவராகக் காட்டி அவர் பிம்பத்தை உடைத்தார். இப்படிக் கலைஞர்கள் சமூக மனசாட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே ரஜினி மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவில்லை என்று கேட்கும் போது அவர் பதில் தரலாம், மறுக்கலாம். அது அவர் மனசாட்சிக்கு உட்பட்டது. ஆனால் சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் அவர் குரல் கொடுத்து அதைத் திசை திருப்பி தன்னுடைய ரசிகர்களைத் தவறான பாதையில் செல்ல வழி வகுக்கக் கூடாது. ஸ்டெர்லைட் பிரச்சினையில் ரஜினி அப்படிச் செய்திருக்கக் கூடாது.

மேலும் படிக்க | சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனையா? பெரிய கோடீஸ்வரர் தான் பா

சமூக விரோதியை ஆதரிக்கும் ரஜினி?

அவர் ஒரு பெரிய கதாநாயகனாக இருக்கிறார். படங்களில் அவர் உடுத்துகிற உடைகளை ரசிகர்கள் உடுத்துகிறார்கள். அவர் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்துகிறார்கள். அப்படிப் பின்பற்றுபவர்கள் இருக்கும்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்று கூறியது எவ்வளவு தவறானது. எதற்கும் குரல் கொடுக்காதவர் அப்படி பேசும்போது கோபம் வரத்தான் செய்யும்.
அரசியலற்று இருங்கள் அமைதியாக இருங்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. 

ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 15 ஆயிரம் பேரை என்கவுண்டர் மூலம் கொலை செய்த யோகி ஆதித்யநாத் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் காலில்  விழும்போது, நாங்கள் கேள்வி கேட்கத்தான் செய்வோம். சமூக விரோதி காலில் ரஜினிகாந்த் விழும்போது அதை நாங்கள் கேள்வி கேட்போம். சமூக விரோதியை அவர் ஆதரிப்பதாகவே எடுத்துக் கொள்வோம்.

நான் மூன்று ஆண்டுகள் ஐநா சபையில் உரையாற்றினேன். மீண்டும் செல்வதற்கு அங்கே அனுமதி உண்டு. ஆனால் 5 ஆண்டுகளுக்கு எனது பாஸ்போர்ட்டை முடக்கி விட்டார்கள். சமூகப் பிரச்சினைகளை பேசினாலே சமூக விரோதிகள் என்கிறார்கள். தேசத்தின் பிரச்சினை பேசினால் தேச விரோதி என்கிறார்கள். இங்கே எதிர் முகாம் பிரம்மாண்டமாகப் பெரும் பலத்தோடு நிற்கிறது. அப்படிப்பட்டவர்களை இது மாதிரி படங்கள் மூலம் தான் எதிர்க்க வேண்டும். அவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். அப்போது டேவிட் கோலியாத் சண்டை போல் நாம் போட வேண்டும். அதனால் தான் இந்த பட முயற்சியை ஆதரிக்கிறோம்" என்று வாழ்த்தினார்.

மேலும் படிக்க | ‘லியோ’ படம் எப்படியிருக்கு…? வெளியானது முதல் விமர்சனம்..!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News