ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன். படம் எப்படி இருக்கு? விமர்சனம்

சமூக தேவையை பேசும் திரைப்படமாக ஐங்கரன் வெளியாகியுள்ளது. அப்படி என்ன கதையை பேசுகிறது இப்படம்??

Written by - Melwin S | Edited by - K.Nagappan | Last Updated : May 3, 2022, 01:43 PM IST
  • ஐங்கரன் படம் எப்படி இருக்கு?
  • இத்தனை வருஷமாவா ரிலீஸ் பண்ணல?
  • ஜிவி பிரகாஷ் மஹிமா ஜோடி
ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன். படம் எப்படி இருக்கு? விமர்சனம் title=

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஹீரோ அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்த்த முயன்றால், அதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டால், அவற்றிலிருந்து மீண்டு ஹீரோ சாதித்தால் அதுவே  ‘ஐங்கரன்’. 

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விடும் குழந்தைகளை உயிருடன் மீட்பதற்கான சாத்தியங்களும், தொழில்நுட்ப வசதிகளும் அவ்வளவாக இல்லாத சூழல் நிலவுகிறது. அறம் போன்ற படங்கள் இதைச் சுட்டிக்காட்டியுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எப்போதும் வசதி படைத்தவர்களுக்கானதுதான் என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் எளிய மக்களுக்கு உதவும் வகையில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் வகையில் தொழில்நுட்பக் கருவிகளின் கண்டுபிடிப்பு அவசியமாகிறது. இந்த அரிய கருத்தை அக்கறையுடன் பதிவு செய்த விதத்தில் ஐங்கரன் திரைப்படம் அர்த்தமுள்ள படமாக அமைந்துள்ளது. 

மேலும் படிக்க | நடிகை மஞ்சு வாரியர் கடத்தலா?! - நடந்தது என்ன? பரபரக்கும் சினிமா உலகம்!

அதே சமயம் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் சாதனை மாணவர்கள், இளைஞர்களை அரசு உரிய முறையில் அங்கீகரிப்பதில்லை, தேவையான ஊக்கத்தைக் கொடுப்பதில்லை என்ற விமர்சனத்தையும் இத்திரைப்படம் முன்வைத்துள்ளது. 

Aingaran

ஈட்டி படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த வெற்றிமாறனின் உதவியாளர் ரவி அரசு இப்படத்தின் மூலம் கமர்ஷியல் கலந்த கருத்துப் படத்தைக் கொடுத்துள்ளார். அவரின் முயற்சி வரவேற்கத்தக்கது. 

ஜி.வி.பிரகாஷின் கரியரில் இது முக்கியமான, வித்தியாசமான, வெரைட்டி காட்டுவதற்கான படம் என்றுகூட சொல்லலாம். தொடர்ந்து சமூக அக்கறையுள்ள படங்களில் தன்னைப் பொருத்திக் கொள்வதற்காகவே அவரைப் பாராட்டலாம். வழக்கமாக நாயகியுடன் அதிகம் ஒட்டிக்கொண்டு இருக்கும் அல்லது இணைந்தே இருக்கும் காட்சிகள் இப்படத்தில் ஜி.வி.க்கு இல்லாதது அவரது கதாபாத்திரத் தன்மைக்கு பலம் சேர்க்கிறது. வேலை தேடும் இளைஞனுக்கான தவிப்புகளையும், நிராகரிப்பின் வலிகளையும் மிகச் சரியாகக் கடத்துகிறார். 

Aingaran

மஹிமா நம்பியாரின் நர்ஸ் கதாபாத்திரம் பெரிய அளவில் இல்லை. சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பும் இல்லை. வழக்கமும் பழக்கமுமான கதாநாயகியாகவே கடந்து போகிறார். காளி வெங்கட், ஆடுகளம் நரேன், அருள்தாஸ் ஆகியோர் கதாபாத்திரங்களின் தேவையை நிறைவேற்றுகிறார்கள். ஹரீஷ் பெராடியின் பக்குவமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. 

மேலும் படிக்க | பீஸ்ட் படமும் கூர்கா படமும் ஒன்றா? கொந்தளித்த இயக்குனர்!

சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பிளஸ். இரண்டாம் பாதியைத் தூக்கி நிறுத்துவதும் அதுதான். ஜி.வி.பிரகாஷ் இசையும், பின்னணியும் பரவாயில்லை ரகம். ராஜா முகம்மதுவின் எடிட்டிங்கில் நேர்த்தி பளிச்சிடுகிறது. படத்தின் தொய்வைச் சரிசெய்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. 

முதல் பாதி முழுக்க கதையை நகர்த்த ரொம்பவே சிரமப்பட்டிருப்பது அப்படமாகத் தெரிகிறது. ரசிகர்களை நெளிய வைக்கும் அளவுக்கு மந்த கதியில் திரைக்கதை நகர்கிறது. ஆனால், இரண்டாம் பாதியின் வேகம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. கதாநாயகிக்கான பங்களிப்பில் கவனம் செலுத்தாததும் பலவீனமான அம்சம். படத்தின் கதையோ, திரைக்கதையோ புதிது இல்லை.  கிளைமேக்ஸில் நியூட்டன் குறித்த இறுதி பன்ச்சுக்கு தியேட்டரில் கிளாப்ஸ் பறந்தது. போரடிக்காமல் ஒரு நல்ல விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஐங்கரனுக்கு நீங்களும் ஒரு முறை விசிட் அடிக்கலாம். படம் பெரிய அளவில் ஏமாற்றாது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News