முகத்தில் வால் உடைய நாய்க்குட்டியை தன்னார்வ கால்நடை ஆதரவு அமைப்பு ஒன்று தெருவில் இருந்து மீட்டு பராமரித்து வருகிறது!!
நம்மில் சிலருக்கு செல்ல பிராணிகள் மீது அதீத அக்கறையும் பாசமும் உண்டு. நான் அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அது விளையாட்டாக இருக்கட்டும் உணவு உண்ணும் முறையாக இருக்கட்டு நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க நாம் கற்றுக்கொடுத்து வளர்ப்போம்.
அதுமட்டும் இல்லாமல் நம் வீட்டில் செல்லப்பிராணிகள் செய்யும் குறும்புத்தனத்தை நாம் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவளைதலத்தில் பதிவிட்டும் வருவதும் வழக்கம். இந்நிலையில், முகத்தில் வால் உடைய நாய்க்குட்டி ஒன்று அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் கான்சாஸ் நகர தெருவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிசோரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பான ‘மாக்’ அமைப்பு இந்த நாயை மீட்டு பராமரித்து வருகிறது.
இது குறித்து, இந்த அமைப்பின் நிறுவனர் ஸ்டெபான் கூறுகையில், ‘7 ஆண்டுகளாக இந்த அமைப்பு, சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறது. குறிப்பாக ஐந்து கால்கள் உடைய நாய்கள், பிறப்பிலேயே உடலுறுப்பு வளர்ச்சி இல்லாத பல நாய்களை கவனத்தில் எடுத்து பராமரித்துள்ளோம். ஆனால் இம்மாதிரி முகத்தில் வால் உள்ள நாய்க்குட்டியை நான் பார்த்ததே இல்லை. கான்சாஸ் நகர தெருவில் சென்று கொண்டிருந்த போது தெருவோரத்தில் பனியில் இந்த குட்டி உறைந்து கிடந்தது. உடனே அதை மீட்டேன். அதற்கு நார்வால் என பெயரிட்டுள்ளேன்’ என்றார்.
நார்வால் என்பது ஆர்க்டிக் கடலில் வாழும் ஒருவகை திமிங்கலம். இந்த திமிங்கலத்தின் தலையில் முன்புறம் தந்தம் போன்ற நீளமான கூர்மையான உறுப்பு இருக்கும். மீட்கப்பட்ட நார்வால் நாய்க்குட்டி கால்நடை மருத்துவரிடம் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்ததில் அந்த வால், நாய்க்குட்டியின் உள் உறுப்புகளோடு எந்த தொடர்பிலும் இல்லை என தெரிய வந்தது. ஆனால் நெற்றியின் நடுவே அமைந்துள்ளது. அந்த வாலை மேலும் கீழும் அசைக்க முடியாது, அதாவது வாலாட்ட இயலாது. இந்த வால் இருப்பதால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. மற்ற நாய்களை போலவே நார்வால் சாதாரணமாகவே இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நாய்க்குட்டியின் புகைப்படங்கள் யூனிகார்ன் பப்பி என இணையத்தில் வைரளாகி வருகிறது.