மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல
நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை
வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.
மார்கழியில் அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை,
திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு
கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால்
பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மேலும் விஷ்ணு ஆலயங்களில்
மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக
ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள்
கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.
இந்நிலையில் மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி
இறையருள் பெறுங்கள்.
பத்தாவது பாடல்:
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
பொருள்:- முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.