இயற்கை நம்மை பல விதங்களில் ஆச்சரியப்படுத்துகின்றது. நம்மை அதிசயப்படவைக்கும் எந்த வாய்ப்பையும் இயற்கை (Nature) விட்டு வைப்பதில்லை. சில நேரங்களில் மழையுடன் வானத்தில் வானவில்லின் ஏழு வண்ணங்கள் நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. சில நேரங்களில் தினம் தோன்றும் சூரியன் மற்றும் நிலவின் தோற்றங்கள் கூட நம்மை கவிஞர்களாக்கி விடுகின்றன.
அவ்வகையில் நதிகளும் (River) எந்த வகையிலும் குறைந்தவையல்ல. நெளிந்து வளைந்து ஓடும் நதியின் அழகு ஒரு நாட்டியத்தைப் போன்றது. அதன் சலசல்ப்பு இசைக்கு ஒப்பானது. சாதாரண நதியே அழகுகளின் பொக்கிஷமாய் இருக்கும்போது, 5 வண்ணங்களில் ஒரு நதி இருந்தால் எப்படி இருக்கும்?
கற்பனையல்ல, நிஜம்தான்!!
5 வண்ணங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு நதியை இன்று பார்க்கலாம்.
5 வண்ண நதி
பெரும்பாலும், நீலம் அல்லது வெள்ளை வண்ணங்களில்தான் நதிகள் காணப்படுகிறன. சூரியனின் வலுவான கதிர்கள் அவற்றின் மீது விழும்போது, அந்த நிரங்களின் அம்சங்கள் தெரிகின்றன. சுற்றி இருள் சூழ்ந்தாலோ, அல்லது நதியின் நீர் அழுக்காக இருந்தாலோ, நதியின் நீரின் நிறம் கருப்பாகவும் மாறுகிறது. இருப்பினும், தென் அமெரிக்காவின் (South America), கொலம்பியா கண்டத்தில், ஒரு நதி உள்ளது. அதன் நீர் 5 வண்ணங்களைக் கொண்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாகவும், மிகவும் அழகாகவும் இருக்கிறது. .
இந்த நதியின் பெயர் கேனோ கிறிஸ்டேல்ஸ் (Cano Cristales) ஆகும். இது ஒரு ஸ்பானிஷ் சொல். ஆங்கிலத்தில், இதன் பொருள் கிரிஸ்டல் சேனல் (Crystal Channel) ஆகும்.
சில நேரங்களில் வண்ணம் மாறும்
இந்த நதியின் நிறம் பொதுவாக ஆண்டின் பெரும் பகுதி பிற நதிகளைப் போலவே இருக்கும். ஆனால் ஆண்டின் சில நேரங்களில், இந்த நதி திடீரென்று தனது வண்ணங்களை மாற்றத் தொடங்குகிறது. அந்த நேரத்தில் அதைப் பார்த்தால் சொர்க்கமாகக் காட்சியளிக்கிறது.
வானில் இருக்கும் வானவில் நதியில் இறங்கியதோ அல்லது ஒரு ஓவியர் தனது தூரிகையால் அழகான வண்ணங்களை நதியில் நிரப்பியுள்ளாரோ என இந்த நதி நம்மை வியக்க வைக்கிறது.
Los colores del arco iris son los mismos que alberga #CañoCristales de nuestra amada Colombia. https://t.co/h2AawuOaVM
— Ariana (@ArianaAladin) August 31, 2020
நிறம் மாறுவதற்கு காரணம்
அந்த பகுதியின் ஈரமான மற்றும் வறண்ட பருவங்களுக்கு இடையிலான மாதங்களில், ஆற்றின் அடிப்பகுதியில் மறைந்திருக்கும் மகரினா கிளாவிஜெரா (Macarina Clavigera) என்ற ஒரு தனித்துவமான செடி, பிரகாசமான சிவப்பு நிறமாக மாறத் தொடங்குகிறது. மெதுவாக மஞ்சள், நீலம், ஆரஞ்சு மற்றும் பச்சை என மீதமுள்ள வண்ணங்களும் அதில் வடிவம் பெறுகின்றன. இந்த ஐந்து வண்ணங்களின் கலவையால் உருவாக்கப்பட்ட இன்னும் பல வண்ணங்களும் தண்ணீரில் தோன்றும். மழைக்காலங்களில், இந்த ஆற்றில் உள்ள நீர் மிகவும் ஆழமாகவும் வேகமாகவும் பாய்கிறது. ஆகையால் இந்த செடிக்கு அதிக சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதனால் அந்த காலங்களில் இது சிவப்பு நிறமாக மாற முடிவதில்லை.
பின்னர் வறண்ட காலங்களில் நீர் மிகவும் குறைவாகி, தாவர உயிர்கள் அதில் செழித்து வளர வாய்ப்பு குறைகிறது.
நடுவில் சில மாதங்களில் மட்டுமே தண்ணீர் மிதமான போக்குடனும், குளிர்ச்சியாகவும் இருப்பதோடு, சூரியனின் மிதமான ஒளி பட்டு அவை வளரும் அளவு நீரின் அளவு இருக்கும். இதனால் தாவரங்கள் உயிர் பெறுகின்றன. இந்த வேளையில்தான் வண்ணங்களின் இந்த அதிசயம் நடக்கின்றது. நதியின் நீரைத் தாண்டி கீழே அழகாகத் தெரியும் செடிகளின் நிறம்தான் நதியில் காணப்படும் இந்த அழகான நிறத்திற்குக் காரணம். இப்படிப்பட்ட அழகான காட்சி செப்டம்பர் முதல் நவம்பர் வரை இங்கு காணக் கிடைக்கிறது.
ALSO READ: டால்பின் சிரிக்குமா?.... இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!