இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையை கருத்தில் கொண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது!
சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1976-ஆம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் இடையே ஆரம்பத்தில் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் அது லாகூரில் இருந்து, பஞ்சாப்பின் அட்டாரியுடன் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர், கடந்த 1994-ஆம் ஆண்டு முதல், வாரம் இருமுறை இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது எல்லையில் போர் பதற்றம் நிலவி வருவதால், இந்த ரயில் சேவையை பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், “பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதை கருத்தில் கொண்டு, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு மேம்படும்போது, இந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்த ரயிலில் கூட்டம் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்றைய தினம் வெறும் 16 பயணிகளுன் இந்த ரயில் புறப்படவிருந்தது, பின்னர் பாகிஸ்தான் அறிவிப்பை அடுத்து இந்த ரயிலின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.