முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இளம் வயதிலேயே அரசியல் பதவிகளையும், அரசு பதவிகளையும் அலங்கரித்த சுஷ்மா சுவராஜ், அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் அனைத்திலும் முத்திரை பதித்தவர் ஆவார். வெளியுறவுத்துறை அமைச்சர் என்றால் உள்நாட்டு மக்களின் தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர் என்ற நிலைமையை மாற்றிய பெருமை இவருக்கே உண்டு. இவர் வெளியுறவு அமைச்சராக இருந்த போது தான், இந்திய மக்கள் யார் வேண்டுமானாலும் தம்மை தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையை ஏற்படுத்தினார். டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும், நேரடியாகவும் தம்மை தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தவர். தமிழக மீனவர்கள் சிக்கலத் தீர்ப்பதற்காக ஆர்வம் காட்டினார்.
தனிப்பட்ட முறையில் என் மீது அன்பு கொண்டிருந்தவர். நான் 2004-ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன் அந்தப் பதவியை வகித்தவர். சுகாதாரத்துறை அமைச்சராக நான் செயல்படுத்திய திட்டங்களை பாராட்டியிருக்கிறார். 2009-14 காலத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். அவரது மறைவு பாரதிய ஜனதாவுக்கு பெரும் இழப்பு ஆகும்.
மறைந்த தலைவர் சுஷ்மா சுவராஜை இழந்து வாடும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.