சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள மேலும் 50 இந்தியர்கள் குறித்த விவரங்களை இந்திய அரசு பகிர்ந்து கொள்ள சுவிஸ் அரசு உத்தரவு!!
இந்தியா-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே, நிதிபரிவர்த்தனை தொடர்பான தகவல்களை பரஸ்பரம் தெரிவித்துக் கொள்வதற்காக, கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி, கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குள் உள்ளிட்ட நிதி ஆதார கணக்கு-வழக்கு விவரங்கள் அந்நாட்டிடமிருந்து பெற்றப்படுள்ளது.
இதன்மூலம், சுவிட்சர்லாந்தில் வசித்து வருவதாக தெரிவித்திருக்கும் இந்தியர்களின், கணக்கில் வராத சொத்துக்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் மீது வரி செலுத்த செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த வகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியாவில் நிறுவனம் நடத்துவதாக கூறி, வங்கி கணக்குகளை தொடங்கி, பணத்தை பதுக்கியிருப்பதாக கூறப்படும், 50 இந்தியர்கள் குறித்த விவரங்களை, மத்திய அரசிடம் அளிக்க சுவிஸ் அரசு முன்வந்திருக்கிறது.
இது குறித்து சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள அரசாணை; இந்த 50 இந்தியர்களுக்கும் கடந்த சில வாரங்களில் நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன. தங்களது சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால், அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு கடைசி வாய்ப்பை இந்த நோட்டீஸ் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. மேலும், 30 நாட்களுக்குள் இவர்கள் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இந்த நோட்டீசுக்கு முன்பாக, இவர்களில் சிலர் தாக்கல் செய்திருந்த ஆரம்பநிலை அப்பீல்கள், போதிய உண்மை விவரங்கள், ஆவணங்கள் இல்லாத காரணத்தால், ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டு விட்டன. அதன் பிறகுதான் இப்போது இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே இதற்கு எதிரான அப்பீல்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என அதில் குறிப்பிட்டுள்ளது.
முழுபெயருடன் அரசு அறிவிப்பு ஆணையில் வெளியிடப்பட்டுள்ள இந்தியர்களின் பட்டியல்; கிருஷ்ண பகவான் ராம்சந்த், பொட்லூரி ராஜ்மோகன் ராவ், கல்பேஷ் ஹர்ஷத் கினாரிவாலா, குல்தீப் சிங் திங்ரா, பாஸ்கரன் நளினி, லலிதாபென் சிமன்பாய் படேல், சஞ்சய் டால்மியா, பங்கஜ் குமார் சரோகி, அனில் பரத்வாஜ், தரணி ரேணு திகம்தாஸ், மகேஷ் திகம்தாஸ் தரணி, சவானி விஜய் கனையாலால், பாஸ்கரல் தரூர், கல்பேஷ்பாய் படேல் மகேந்திரபாய், அஜய் குமார், தினேஷ்குமார் ஹிமத்சிங்கா, ரதன் சிங் சவுத்ரி, கதோடியா ராகேஷ் குமார்.
பலரது பெயர்கள் அவர்களது முதல் எழுத்துகளால் (இனிஷியல்கள்) மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவை; NMA, MMA, PAS, RAS, ABKI, APS, ASBK, MLA, ADS, RPN, MCS, JNV, JD, AD, UG, YA, DM, SLS, UL, SS, RN, VL, UL, OPL, PM, PKK, BLS, SKN மற்றும் JKJ. இவர்களில் பலரும், கொல்கத்தா, குஜராத், பெங்களூரு, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களது கம்பெனிகளும் அங்கு அமைந்துள்ளன.
கறுப்புப் பணக்காரர்களின் புகலிடம் எனக் கருதப்படுகிற சுவிட்சர்லாந்து, சமீப ஆண்டுகளாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன், சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வரி ஏய்ப்பாளர்கள், நிதி மோசடியாளர்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது.