லாலு பிரசாத் மீதான மாட்டு தீவன ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
பீகார் மாநிலத்தில் 1990-97-ல் லாலுபிரசாத் யாதவ் முதல்-மந்திரியாக இருந்த போது மாட்டுத்தீவனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.950 கோடி ஊழல் செய்ததாக லாலுபிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து லாலு பிரசாத் தரப்பில் சுப்ரீம் கோர்ட் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிபிஐ தரப்பில் லாலுவுக்கு எதிரான சதி குற்றச்சாட்டை ஜார்க்கண்ட் ஐகோர்ட் கைவிட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்:-
லாலு மீதான சிபிஐ வழக்குகள் தொடரும். அவர் மீதான அனைத்து வழக்குகளிலும் புதிதாக விசாரணை நடத்தப்பட வேண்டும். லாலுவுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையிலும் புதிதாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தண்டனை மற்றும் வழக்கில் இருந்து லாலுவை விடுவிக்க முடியாது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. லாலுவிற்கு சாதகமாக ஜார்கண்ட் ஐகோர்ட் வழங்கிய உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
இதனால் லாலு மீதான ரூ.945 கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கில் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.