உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், உணவுப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக கடந்த மாதம் தமிழக அரசு பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடை விதித்தது. மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடமைன் பி என்ற ரசாயனம் கலந்திருப்பதால், பஞ்சு மிட்டாய் மற்றும் இந்த நிறமியைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவுகளை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்தது நினைவில் இருக்கலாம்.
உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனை
பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் இரண்டுமே பலரும் விரும்பி சாப்பிட்டு வரும் உணவாகும். அதிலும் குறிப்பாகப் பஞ்சு மிட்டாய் என்பது சிறுவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக இருக்கிறது. இந்நிலையில், கர்நாடக சுகாதாரத் துறையின் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாதிரிகளைப் சேகரித்து ஆய்வு செய்தனர். அந்த மாதிரிகளில் புற்றுநோயை (Cancer) உண்டாக்கும் ஆபத்தான இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் ராவ் அளித்த தகவல்
பரிசோதனை முடிவுகளின் விவரங்களை அளித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் ராவ், “கோபி மஞ்சூரீயன் மாதிரிகள் 171 eடுக்கப்பட்ட நிலையில் அதில், 107 மாதிரிகளில் டார்ட்ராசின், சன்செட் யெல்லோ மற்றும் கார்மோசின் கலர் போன்ற புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதேபோல், பஞ்சு மிட்டாய்களின் 25 மாதிரிகளில், சுமார் 15 மாதிரிகளில் டார்ட்ராசைன் மற்றும் ரோடமைன்-பி போன்ற செயற்கை மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது என்றார்.
மேலும் படிக்க | தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பேஸ்புக் பக்கம் ஹேக்! விஜய் பட காட்சிகள் பதிவேற்றம்
செயற்கை நிறமிகள் பயன்பாடு உறுதிப்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை
சோதனை ஆய்வுகளில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில், அரசாங்கம் கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார். இந்த உத்தரவை மீறும் உணவு விற்பனையாளர்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் / உணவக உரிமையாளர்களுக்கு, 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹10 லட்சம் அபராதம் தவிர, வர்த்தக உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.
முழுமையாக தடை விதிக்க முடியாது: சுகாதாரத்துறை அமைச்சர்
எனினும், இந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். “கோபி மஞ்சூரியன் சத்தான உணவு தான். அதில் செயற்கை இரசாயனங்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். இதேபோல், நிறமற்ற பஞ்சு மிட்டாய்களின் விற்பனையும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
சுகாதார துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கை
மக்களுக்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதைத் உறுதி செய்ய சுகாதார துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்கையில், “சுகாதாரத் துறையின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு, ஆபத்தான ரசாயனங்கள் மற்றும் நிறமிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளும். இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை ஸ்டால்கள் மற்றும் உணவகங்களின் மாதிரிகளை, அடிக்கடி பரிசோதனை செய்ய அதிக பணியாளர்களை அரசு நியமிக்கும்” என்றார்.
மேலும் படிக்க | மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... மூன்று நாள் சுற்றுப்பயணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ