அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பிற்கு 27,000 ராணுவ வீரர்கள்

Last Updated : May 24, 2017, 05:25 PM IST
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பிற்கு 27,000 ராணுவ வீரர்கள் title=

ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனிலிங்க தரிசனம் செய்ய புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக 27,000 ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

அமர்நாத் புனித யாத்திரை ஜூன் 29-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இங்கு செல்ல இதுவரை 1.8 லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரிகர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரிகர்களுக்கு பயங்கரவாதிகளாலும், பிரிவினைவாதிகளாலும் எந்த வித இடையூறும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ராஜிவ் உறுதியளித்துள்ளார். அனைத்து துறையினரும் விழிப்புடன், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அமர்நாத் வழித்தடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட 27,000 ராணுவ வீரர்களை வழங்கு வேண்டும் என மத்திய அரசுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதனால், அமர்நாத் யாத்திரை வழித்தடத்தில் 27,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

Trending News