Prashant Kishor meets Congress leaders: பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் வியூகம் தொடங்கிவிட்டதா?

2019 தேர்தலில் பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக நியமிக்கலாம் என்ற யோசனையை அப்போது ராகுல் காந்தி நிராகரித்தார். ஆனால் இன்று ராகுல் காந்தி பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். அன்றைய நிராகரிப்புக்கு காரணம் என்ன? இன்றைய சந்திப்புக்கு காரணம் என்ன?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 13, 2021, 05:48 PM IST
  • பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் வியூகம் தொடங்கிவிட்டதா?
  • ஒரு காலத்தில் பிரசாந்த் கிஷோரை நிராகரித்த ராகுல் காந்தி தற்போது சந்தித்திருக்கிறார்
  • அன்றைய நிராகரிப்புக்கு காரணம் என்ன? இன்றைய சந்திப்புக்கு காரணம் என்ன?
 Prashant Kishor meets Congress leaders: பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் வியூகம் தொடங்கிவிட்டதா?  title=

புதுடெல்லி: அரசியல் வியூகம் வகுப்பதில் சாணக்கியர் என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

2019 தேர்தலில் பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக நியமிக்கலாம் என்ற யோசனையை அப்போது ராகுல் காந்தி நிராகரித்தார். ஆனால் இன்று ராகுல் காந்தியை மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர்களான பிரியங்கா காந்தி, கே.சி வேணுகோபால் உட்பட பலர் பிரசாந்த் கிஷோரை சந்திக்கின்றனர். 

அன்றைய நிராகரிப்புக்கு காரணம் என்ன? இன்றைய சந்திப்புக்கு காரணம் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன.

ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் அரசு மருத்துமவனை ஒன்றைக் கட்டினார். அப்போது அந்த மருத்துமனைப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மருத்துவமனைச் செயல்பாட்டைப் பார்த்துக்கொள்ளவும் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டார். 

ஐ.நா-வில் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர் கிஷோர். அவர் அங்கு திட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிகளை திறம்பட மேற்கொண்டுவந்தவர் என்ற நற்பெயரை பெற்றிருந்தார். அமேதியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட மோதலால் அங்கிருந்து வெளியேறினார் பிரசாந்த் கிஷோர்.

அதன்பிறகு அவர் பல்வேறு கட்சிகளுக்காக பணியாற்றினார். தேர்தல் வியூகங்களை வகுத்து, ஒரு அரசியல் கட்சியை வெற்றி பெறச் செய்வதில் வல்லவர் என்று புகழ்பெற்றவர் பிரசாந்த் கிஷோர். `பி.கே’ என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். 2015ஆம் ஆண்டு 2015-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு ஆதரவாகத் தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்தார் பி.கே. 

Also Read | Prashant Kishor: அரசியலுக்கு தலைமுழுக்கு, குடும்பத்துடன் நிம்மதியாக இருப்பேன்

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நிதிஷ் குமார் பிரிந்து தேர்தலைச் சந்தித்த அந்த சமயத்தில், நிதிஷ்குமார் வெற்றி பெறுவாரா என்ற சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அப்போது கிஷோரின் மாஸ்டர் பிளானால் வெற்றி கிடைத்தது. அதையடுத்து பிரசாந்த் கிஷோரின் பெயர் இந்திய அரசியலில் பிரபலமானது. 

2014இல் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சி அமைக்க வியூகம் வகுத்துக் கொடுத்தவரும் பிரசாந்த் கிஷோர் தான். ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜகவுடனான கருத்து மோதலில் அக்கட்சியிடம் இருந்து விலகினார் பி.கே. `பாஜகவை வீழ்த்துவதுதான் எனது குறிக்கோள்’ என்று வெளிப்படையாகவே தெரிவித்தார் பிரசாந்த் கிஷோர். 

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில்  (Punjab Election) அம்ரீந்தர் சிங்குக்குப் பணியாற்றினார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி (Congress Party) வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதையடுத்து 2019 நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கு பிரசாந்த் கிஷோரின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் சொன்னார்.

Also Read | இந்தியாவின் வட மாநிலங்களில் இயற்கை சீற்றம், மின்னல் தாக்கி 75 பேர் பலி

ஆனால், ராகுல் காந்தி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது, காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் கிஷோரின் பணி அவசியம் என பலரும் எடுத்துச் சொன்னதை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை.  

ஆனால், அதற்கெல்லாம் கவலைப்படாத பிரசாந்த் கிஷோர், 2019-ம் ஆண்டு தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். ஜெகனின் கட்சி வெற்றி பெற பிரசாந்த் கிஷோரின் தேர்தல் உத்தி தான் காரணம் என்று கூறப்பட்டது.

அதன்பிறகு அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுகவிற்கும், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும் தேர்தல் உத்திகளை அமைத்துக் கொடுத்தார். இரு மாநிலங்களிலும் அவர் பணியாற்றிய கட்சிகளே ஆட்சிக்கு வந்தன.

Also Read | இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி; இன்னும் சில நாட்களில்

2021 தேர்தல்களுக்குப் பிறகு, தான் இனி ஐபேக் நிறுவனத்தில் இருந்து விலகியிருப்பதாகவும், இனி பணியில் ஈடுபடப் போவதில்லை என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். அதுவும் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியவுடனே இதனைத் தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவீர்களா என்று பி.கேவிடம் கேட்கப்படட்போது, காங்கிரஸில் நான் யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று எதிர்கேள்வி எழுப்பி அனைவரையும் வாயடைக்கச் செய்துவிட்டார் பிரசாந்த் கிஷோர். 

இந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பிரசாந்த் கிஷோரை சந்தித்திருப்பது அனைவரின் ஆவலையும் அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கான வியூகங்களை அமைப்பதற்கான சந்திப்பு இதுவா என்ற கேள்விகள் எழுகின்றன.

Also Read | உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று நேபாள பிரதமர் KP ஷர்மா ஓலி ராஜினாமா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News