குமாரசாமி என்னை ஒருபோதும் ஒரு நண்பராகவோ அல்லது நம்பிக்கைக்குரியவராகவோ கருதவில்லை என சித்தராமையா குற்றசாட்டு!!
கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை குமாரசாமி மற்றும் தேவேகவுடா ஆகியோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று HD குமாரசாமி, தான் முதல்வராக இருந்தது பிடிக்காததால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி செய்தார் என்று சித்தராமையா மீது குற்றம் சாட்டினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறுகையில்; குமாரசாமி என்னை ஒருபோதும் ஒரு நண்பராகவோ அல்லது நம்பிக்கைக்குரியவராகவோ கருதவில்லை, மாறாக என்னை ஒரு எதிரியாகவே நினைத்தார். அது எல்லா பிரச்சினைகளுக்கும் வழிவகுத்தது. குமாரசாமி முதல்வராக இருந்தபோது காங்கிரசாரின் கோரிக்கைகள், குறைகள் ஆகியவற்றை கேட்கவில்லை. அதனால் தான் அவர்கள் ராஜினாமா முடிவுக்கு வந்தனர். குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு காங்கிரசார் காரணம் அல்ல. அவரும், அவருடைய குடும்பத்தினரும் தான் காரணம்.
Siddaramaiah, former Karnataka CM & Congress leader, in Mysuru: HD Kumaraswamy never treated me as a friend or confidant, but instead considered me as an enemy and that led to all the problems. (25.08.2019) pic.twitter.com/FW4gpOfGZC
— ANI (@ANI) August 26, 2019
ஆட்சியில் பிரச்சினைகள் உருவானது அவர்களால் தான். கட்சிக்கு செய்த துரோகத்திற்காகத் தான் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தோம். இது நானும், தினேஷ் குண்டுராவும் சேர்ந்து எடுத்த முடிவு. அவர்கள் மீண்டும் கட்சிக்கு வந்தால் எக்காரணத்தைக் கொண்டும் சேர்த்துக் கொள்ள மாட்டோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் தேர்தல் நடந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எடியூரப்பா பின்வாசல் வழியாக வந்து ஆட்சியை பிடித்துள்ளார்" என அவர் தெரிவித்தார்.