ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன!!
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் நாள் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-னை மத்திய அரசு நீக்குவதாக அறிவித்தது. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இது காஷ்மீர் மீதான அரசாங்கத்தின் கடுமையான அணுகுமுறையைக் காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்தன.
செல்போன் பயன்படுத்த தடை நீங்காமல் சுற்றுலாப் பயணிகள் எப்படி காஷ்மீருக்கு வருவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று அரசியல் கட்சித் தலைவர்களும் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். யாவர் மீர், நூர் அகமது, சோயப் லோன் ஆகியோரை இன்று விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த படையினர் திரும்பப்பெறப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் காஷ்மீர் தலைவர்கள், பிரிவினைவாதிகள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகிய மூன்று முன்னாள் முதலமைச்சர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா மீது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீ`ழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் விசாரணையில்லாமல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைப்படுத்தப்படலாம். பரூக் அப்துல்லாவை நண்பர்களும் உறவினர்களும் சந்திக்க தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.