48 மணி நேர வேலை நிறுத்தத்தை ஒத்திவைத்த வங்கி ஊழியர்கள்!! சேவை தொடரும்!!

தற்காலிகமாக வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2019, 08:10 AM IST
48 மணி நேர வேலை நிறுத்தத்தை ஒத்திவைத்த வங்கி ஊழியர்கள்!! சேவை தொடரும்!! title=

புதுடெல்லி: செப்டம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்த அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, தற்போது தற்காலிகமாக வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முக்கியக் காரணம் நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் அளித்த உத்தரவாதம் எனக் கூறப்படுகிறது.

நாட்டின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் தான் வங்கிகள் இணைக்கப்படுகின்றன எனக் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் பாங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளுடன் பிற 10 வங்கிகளை இணைக்கப் போவதாக அறிவித்தார். இதன் மூலம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் இதற்கு விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், "வங்கிகள் இணைப்பால் எந்த வங்கியும் மூடப்படாது. வேலை இழப்பு ஏற்படாது என உத்தரவாதமும் அளித்தார். 

அவரின் உத்தரவை அடுத்து, வங்கிகளின் இணைப்பை கண்டித்து வருகிற 25 ஆம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு முதல் 27 ஆம் தேதி நள்ளிரவு வரை என 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் (சண்டிகர்) தீபல் குமார் சர்மா தெரிவித்திருந்தார். மேலும், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு ஆகிய சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்தனர். 

ஆனால் தற்போது வங்கி அதிகாரிகள் அமைப்புகள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் 48 மணி நேர வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அரசுடன் தொடர்ந்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது என்றும், அதில் உடன்பாடு ஏற்ப்படாத சூழ்நிலை ஏற்ப்பட்டால் வேலைநிறுத்தம் குறித்து ஆலோசனை செய்யப்படும். தற்போது தற்காலிகமாக வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கம் போல, இந்த நாட்களிலும் வங்கி சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு நேற்று நான்கு வங்கி தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் புது தில்லியில் நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமாரை சந்தித்த பின்பு, இந்த முடிவு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News