டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்!!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் பூர்த்தி செய்வதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள், காலை 8 மணி முதல், பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. தொடக்க முதலே, பெரும்பான்மை பலத்துக்கு தேவையானதை விட, ஆளும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றது. பகற்பொழுது வரை, இரட்டை இலக்கத்தில் முன்னிலை பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி, பிற்பகலில் ஒற்றை இலக்கத்திற்கு மாறியது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆம் ஆம்தி கட்சி 63 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 7 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படியே, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் மண்ணை கவ்வியது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, டெல்லி பெண்கள் மத்தியில் திடீர் பிரபலமான வேட்பாளர் ராகவ் சாத்தா (Raghav Chadha) உள்ளிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வாகை சூடினர்.
கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கெஜ்ரிவால், தேர்தல் முடிவு, புதிய அரசியலின், புதிய தொடக்கம் என்றும், இது நல்லதொரு புதிய சகுனம் என்றும் தெரிவித்தார். வெகுஜனத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது என்ற அயராத பணிக்குக் கிடைத்த வெற்றி என்று கூறிய கெஜ்ரிவால், உற்சாக மிகுதியில், டெல்லி மக்களை நேசிப்பதாக கூறினார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to AAP and Shri @ArvindKejriwal Ji for the victory in the Delhi Assembly Elections. Wishing them the very best in fulfilling the aspirations of the people of Delhi.
— Narendra Modi (@narendramodi) February 11, 2020
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்.. 'டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் பூர்த்தி செய்வதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.
Thank u so much sir. I look forward to working closely wid Centre to make our capital city into a truly world class city. https://t.co/IACEVA091c
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 11, 2020
இதை தொடர்ந்து, பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள கெஜ்ரிவால், 'டில்லியை உலக தரமான நகரமாக மாற்ற, மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்' என பதிவிட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் 3 இடங்களை மட்டும் பிடித்த பாஜக இந்த தேர்தலில் அதை 8 ஆக அதிகரித்துள்ளதுடன், தனது வாக்கு சதவிகிதத்தையும் 32 ல் இருந்து 39 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.