இன்று இந்திய சந்தைகளின் துவக்கத்தில் (Early Trade), அமெரிக்க டாலருக்கு (American Dollar) நிகரான இந்திய ரூபாயின் (Indian Rupee) மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 74.52 ஆனது. அமெரிக்க டாலரில் காணப்படும் மந்த நிலையும் இந்திய உள்ளூர் சந்தைகளின் ஏற்றமும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எண்ணுகிறார்கள்.
ஜூலை 3 அன்று சந்தைகள் (Markets) முடியும்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.66 என்ற அளவில் இருந்தது.
இந்திய பங்குகள் குறித்த நேர்மறையான கண்ணோட்டமும், நிலையான கச்சா எண்ணெய் விலைகளும், அந்நிய நிதி வருகையும் மந்தமான அமெரிக்க நாணய மதிப்பும், இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கக் காரணம் என அந்நிய செலாவணி வணிகர்கள் கருதுகிறார்கள்.
இன்றைய வர்த்தகத்தில் 74.53-ல் துவங்கிய இந்திய ரூபாயின் மதிப்பு, பின்னர் சற்று அதிகரித்து 74.52 ஆனது. முந்தைய வணிக நாளான ஜூலை 3 ஆம் தேதி முடிவடைந்த அளவுகளுடன் இது 14 காசுகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
”ஆசியாவிலிருந்து வரும் குறிப்புகள் வலுவாக உள்ளன. பல ஆசிய நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு நிகராக வலுவாக உள்ளன. ” என ரிலயன்ஸ் செக்யூரிடிஸ் வெளியிட்டுள்ள ஆய்வுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”வலுவான பங்குகள், சீரான கச்சா எண்ணெய் விலைகள், ரிசர்வ் வங்கி டாலர் வாங்குவதில் காட்டும் தயக்கம், வலுவிழந்த அமெரிக்க டாலர் ஆகியவற்றின் காரணமாக, வரும் நாட்களிலும் ஆசிய நாணயங்கள் வலுப் பெறுவதைக் காண முடியும்” என அந்த குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆறு நாடுகளின் நாணய மதிப்புகளுடன் ஒப்பிடப்பட்டு நிர்ணயிக்கப்படும் டாலர் குறியீடு (Dollar Index) 0.22% குறைந்து 96.96 ஆனது.
உள் நாட்டு சந்தையில், காலை சுமார் 11 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் (Sensex) 418.71 புள்ளிகள் அதிகரித்து 36,440.13 என்ற அளவிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி (Nifty) 138.06 புள்ளிகள் அதிகரித்து 10,745.40 என்ற அளவிலும் இருந்தன.
உலகளாவிய கச்சா எண்ணெய் குறியீடான Brent crude futures, 0.56% அதிகரித்து பாரலுக்கு 43.04 டாலர் என்ற அளவில் உள்ளது.
ALSO READ: இந்தியா-பூட்டான் கோலோங்சு நீர் மின் திட்டம் ஒரு அலசல்...