மெலனியா டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெற்கு டெல்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வரவுள்ளனர். இந்த இரண்டு நாள் பயணத்தின் போது புது தில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களை விசிட் செய்கிறார் டிரம்ப் மற்றும் அவரது மனைவி.
அமெரிக்க அதிபர் டிரம்ப் 24ம் தேதி இந்தியா வர உள்ள நிலையில், டெல்லியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகமதாபாத்-ஆக்ரா-டெல்லி ஆகிய மூன்று இடங்களில் மொத்தம் 36 மணி நேரம் இருக்கும் டிரம்ப் 25ம் தேதி பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்துகிறார்.
உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அவருடன் பிரதமர் மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார். மேலும் அகமதாபாதில் இருந்து ஆக்ரா செல்லும் டிரம்ப் அங்கு தாஜ்மகாலை காண இருக்கிறார்.
டெல்லியில் பிப்ரவரி 25ம் தேதி பிரதமர் மோடியுடன் டிரம்ப் நேருக்கு நேராய் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். டிரம்ப்பின் வருகையை ஒட்டி டெல்லியில் 24 மற்றும் 25ம் தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்தியா பயணத்தின் போது, முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் டெல்லி அரசு பள்ளிகளில் "மகிழ்ச்சி வகுப்பை" பார்க்க வாய்ப்புள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி விஜயத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை சிறப்பு விருந்தினராக மெலனியா டிரம்ப் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்குச் செல்லலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மெலனியா டிரம்பும் ஒரு மணி நேர பயணத்தில் பள்ளி குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிடுவார்.
மெலனியா டிரம்பை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்க வாய்ப்புள்ளது, பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தும் நேரத்தில் முதல் பெண்மணியின் தனி பயணம் நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.