வேலூர் மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணைக்கட்டு மற்றும் வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர்,வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுகவே காரணம் என்றார். திமுகவினருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் பணம் பிடிபட்டது தொடர்பாக தேர்தலுக்கு பின்னர் சட்டப்படி நடவடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முதலமைச்சர் பட்டியலிட்டார். கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வரை அனைவருக்குமான திட்டங்களை அதிமுக அரசு செய்து வருவதாக அவர் கூறினார். அதிமுக ஆட்சியை நினைத்து கவிழ்த்து விட முடியுமென ஸ்டாலின் கூறுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். உண்மைதான் எப்போதும் வெல்லும் என்ற அவர், ஸ்டாலின் என்ன நினைத்தாலும் ஆட்சியை கவிழுக்க முடியாது என்றார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கைப் பற்றியும், பெண்கள் பாதுகாப்பு பற்றியும் பேசி வருகிறார். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என கூறுகிறார்.
ஆனால் உமா மகேஸ்வரி உள்பட 3 பேரை கொலை செய்தவர்கள் தி.மு.க பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் என்பதை இரண்டே நாட்களில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். எனவே சட்டம்-ஒழுங்கைப் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரது ஆசை வார்த்தைகளை நம்பி, எங்கள் இயக்கத்தை விட்டு வெளியேறியதன் காரணமாக, இன்றைக்கு ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள். உண்மை தான் வெல்லும். நிஜம் தான் ஜெயிக்கும், நீதி தான் வெல்லும்.
எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் தி.மு.க.வின் தூண்டுதலின் பேரில் எண்ணற்றப் போராட்டங்கள் பல்வேறு அமைப்புகள் மூலம் நடத்தப்பட்டன. போராட்டம் செய்த அமைப்புகளை அழைத்து சமாதானம் பேசி, போராட்டத்தை கைவிடச் செய்து வெற்றி கண்ட அரசு அம்மாவின் அரசு. நாட்டிலேயே சிறுபான்மையின மக்கள் அமைதியாக பாதுகாப்பாக வாழும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று முதலமைச்சர் கூறினார். வேலூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று அவர் தெரிவித்தார்.