கலைஞர், தளபதி வரிசையில்...சின்னவரா ? சின்னவனா ? - உதயநிதிக்கு சிக்கலாகும் பட்டப்பெயர்கள்!

Udhayanidhi Stalin Explains Dont Tell Chinnavar : உதயநிதியை துரத்தும் பட்டப்பெயர் சர்ச்சை. எந்தப் பெயரில் அழைக்க வேண்டும் என்றும், அது ஏன் என்றும் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 14, 2022, 06:20 PM IST
  • உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கலாகும் பட்டப்பெயர்கள் ?
  • ‘சின்னவரே’ என்று அழைக்கும் திமுகவினர்
  • பல பேர் வயிற்று எரிச்சல் அடைவதாக உதயநிதி விளக்கம்
கலைஞர், தளபதி வரிசையில்...சின்னவரா ? சின்னவனா ? - உதயநிதிக்கு சிக்கலாகும் பட்டப்பெயர்கள்! title=

உலகில் வேறு எங்குமில்லாத ஒரு பழக்கம் தமிழ்நாட்டிற்கு உண்டு. பெயர் இல்லாமல் தனியாக பட்டம் சூட்டிக்கொள்வது. பெரும்பாலும் இந்தப் பட்டத்தை அவர்கள் மீதான அன்பின் மிகுதியில் அவர்களது விருப்பத்துக்குரியவர்கள் அல்லது மக்களே சூட்டுவதுண்டு. சில சமயம் தாங்களாகவே சூட்டிக்கொள்வதுண்டு. இரண்டாவது ரகங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. முதல் ரக மனிதர்கள்தான் தமிழக வரலாறு நெடுக பயணித்திருக்கிறார்கள். 

மேலும் படிக்க | திமுக சந்தோஷப்பட வேண்டாம்.. உதயநிதி பட்டாபிஷேகத்தில் இதே தான் நடக்கும் - சி.வி.சண்முகம்

பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தந்தைப் பெரியார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி என அரசியல் தலைவர்களுக்குத்தான் எத்தனைப் பட்டப்பெயர்கள். 

அரசியல் மட்டுமல்ல, சினிமாவிலும் இந்தப் பெயர்கள் பிரபலம். சொல்லப்போனால், சினிமாவில் இருந்துதான் இதன் தாக்கம் அரசியலுக்குள்ளும் நுழைந்திருக்கிறது. நாளடைவில், இந்தப் பட்டப்பெயர் வியாதி எல்லாத்துறையிலும் ஒட்டிக்கொண்டுவிட்டது. சரி விஷயத்துக்கு வருவோம். திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமாவில் எந்தப் பட்டப்பெயரும் இல்லை. ஆனால், திமுகவில் அவரை ‘சின்னவர்’ என்று அழைத்து வருகின்றனர் திமுக தொண்டர்கள். 

udayanidhi stalin

‘குடும்ப அரசியல்’ என்ற இந்தியாவின் பாரம்பரியமிக்க விரக்திச் சொற்றொடர்களில் அனைத்துக் கட்சிகளும் இருந்தாலும் திமுகவின் மீது மட்டும் எப்போதும் அதிகம் வெளிச்சம் பாய்ச்சப்படுகின்றது. இதற்கு லேசாக தீனிபோடும் வகையில் உதயநிதியை ‘சின்னவர்’ என்று அழைக்கும் அரசியல், உதயநிதிக்கே உவப்பை அளித்துள்ளது. அதற்கு முன்னதாகவே, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற குரல்களை,  ‘இதுமாதிரி கூற வேண்டாம்’ என்று அன்புக்கட்டளையிட்டு அவரே அடக்க வேண்டியிருந்தது. தற்போது பட்டப்பெயர் சர்ச்சை.! 

காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கம் கூட்டம் மற்றும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு  பொற்கிழி வழங்கும் விழாவில் இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். பட்டப்பெயர் சர்ச்சைக்கு உதயநிதி பேசியதை அவரது குரலிலேயே கேட்கலாம். ‘என்னை சின்னவன் என்றே கூறுங்கள் ; உங்களுடைய உழைப்பு அனுபவத்தில் நான் சின்னவன் தான். என்னை செல்லமாக சின்னவன் என்றே இனி கூப்பிடலாம். என்னைச் சின்னவரே என்று கூறினால் பல விமர்சனங்கள் எழுகிறது. பல பேர் வியிற்று எரிச்சல் அடைகிறார்கள். ஆகையால் என்னை நீங்கள் சின்னவன் என்றே கூப்பிடலாம்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும் படிக்க | அதிமுக அலுவலகம் எங்களின் புனிதத் தலம் : அதைக் காலால் மிதிக்கலாமா ? - சி.வி.சண்முகம் ஆவேசம்

தொடர்ந்து அதன் நீட்சியாக அவர் பேசியதாவது, ‘இனிமேல் அதிமுகவை நாம் திட்டவோ, விமர்சிக்கவோ அவசியமே இல்லை. கடந்த சில நாட்களாகவே அவர்களுக்குள்ளாகவே அவர்களைத் திட்டிக்கொண்டுக் கல் எறிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் அதிமுகவிற்கு வரலாறு கிடையாது. நமது திமுக இயக்கத்திற்கு வரலாறு இருக்கின்றது. அந்த வரலாறுக்கு சாட்சியாக திமுக மூத்த முன்னோடிகளாக நீங்கள் உள்ளீர்கள். நீங்கள் இல்லையென்றால் திமுக கிடையாது. 

udayanidhi stalin

எனவே என்னைப் போன்ற இளைஞர்களை, இந்தச் சின்னவனை மூத்த முன்னோடிகள் எங்களது கைகளைப் பிடித்து அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் எங்களுக்கு வழி காட்டுங்கள். உங்களது வழிக்காட்டுதலோடு நாங்கள் வழி நடக்கின்றோம்’ என்று உதயநிதி தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News