Tamil Nadu Government Scheme: தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இருப்பினும், அந்த திட்டத்தின்கீழ் ஊக்கத்தொகை பெற என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியமாகும்.
தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கடந்த ஆக.9ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் (Pudhumai Penn Scheme) மூலம் மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுவதை போன்று, மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை இந்த தமிழ்ப் புதல்வன் திட்டம் (Tamil Pudhalvan Scheme) வழிவகை செய்கிறது. இந்த திட்டம் குறித்து சற்று விரிவாக இதில் காணலாம்.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) வழங்கி வருகிறது.
இந்த தமிழ்ப் புதல்வன் திட்டம் (Tamil Pudhalvan Scheme), அரசு பள்ளி மாணவர்கள் உயர்க்கல்வியை நோக்கி செல்லவும், எவ்வித பொருளாதார தடையும் இன்றி உயர்க்கல்வி பயிலவும், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் (Pudhumai Penn Scheme) மூலம் மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தற்போது தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு சுமார் 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தகுதிவாய்ந்த 3 லட்சம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி, ஆக.31ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
எனவே, இந்த கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்துவிட்டாலும் தற்போது அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் இந்த தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து தெரிந்துவைத்துக்கொள்வது அவசியமாகும். இந்நிலையில், கல்லூரிக்குச் செல்லும் போது யார் யாருக்கு இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் கிடைக்கும் என்பது இங்கு காணலாம்.
தமிழ்நாட்டின் அரசு பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும், அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் வழியிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, தற்போது உயர்க்கல்வி பயிலும் மாணவர்களே இந்த ஊக்கத்தொகையை பெற தகுதிவாய்ந்தவர்கள். வருமானம் உச்சவரம்பு போன்ற எவ்வித பாகுபாடும் இதில் கிடையாது.
மாணவர்கள் பயிலும் உயர்க்கல்வி நிறுவனமும், பாடப்பிரிவும் அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதே நேரத்தில், தொலைதூர மற்றும் தபால் வழியில் பயிலும் மாணவர்களும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனம் மற்றும் பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்காது. மத்திய அரசின் நிறுவனங்களில் படித்தாலும் இந்த ஊக்கத்தொகையை பெறலாம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு வரை பயின்று அதன்பின் ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு 7ஆம் தேதிக்குள் நேரடியாகவே அவர்களின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும்.
ஒரு குடும்பத்தில் இருந்து எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் இந்த ஊக்கத்தொகையை பெறலாம். நீங்கள் வேறு ஏதேனும் ஊக்கத்தொகையை பெறுபவராக இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழும் பயன்பெறலாம். ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் மட்டும் முதல் 3 ஆண்டுகள் ஊக்கத்தொகை பெற இயலும்.