முறைகேடுகளால் போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம் -மு. சண்முகம் அறிக்கை

முறைகேடுகளால் போக்குவரத்துக் கழகங்களை முடக்கி வருகிறது என தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு. சண்முகம் அறிக்கை வெளியீடு.

Last Updated : Nov 16, 2017, 01:14 PM IST
முறைகேடுகளால் போக்குவரத்துக் கழகங்கள் முடக்கம் -மு. சண்முகம் அறிக்கை title=

“முறைகேடுகளால் போக்குவரத்துக் கழகங்களை முடக்கி வருகிறது. அ.தி.மு.க. அரசினால் தொழிலாளர்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறி தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு. சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டதாவது:-

‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பணிமனைகள், பேருந்து நிலையங்கள், அலுவலகக் கட்டிடங்கள், காலி மனைகள் ஆகியவற்றை ரூபாய் 2496 கோடிக்கு அடகுவைத்து, போக்குவரத்துக் கழகங்கள் நடத்தப்படுவதாக’, ஒரு செய்தி ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில், 11.11.2017 அன்று மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையைச் சார்ந்த திரு. கே.ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்பெற்ற தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஜூலை 7, 2017 அன்று  ‘டெக்கான் கிரானிக்கல்’ எனும் ஆங்கில நாளேட்டில், “போக்குவரத்துக் கழகங்கள் தங்களுடைய வழித்தடங்கள், அலுவலகக் கட்டிடங்கள், பணிமனைகள், தொழிலாளர்களின் ஓய்வு கால பலன்கள் ஆகிய அனைத்தும் ஏறத்தாழ ரூ.15,000 கோடி அடகு வைக்கப்பட்டுள்ளது”, என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

இதனையொட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட பிரத்யேக அறிக்கையில், கழகங்கள் நடத்துவதற்கு பணிமனைகளை, பேருந்துகளை, சொத்துக்களை அடகுவைத்து பணம் பெறப்படுவதும், தொழிலாளர்களுடைய ஓய்வுகாலப் பலன்களை வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதையும் பழுதுபட்ட பேருந்துகளைக் கொண்டு மக்களை பயணிக்கச் செய்வதால் ஏற்படும் விபத்துக்களைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதையும், தொழிலாளர்களுக்கு மாத ஊதியத்தைக் கூட வழங்க இயலாமல் தவணை முறையில் வழங்குவது போன்ற நடவடிக்கைகளால் அவதியுறும் பொதுமக்கள், தொழிலாளர்கள் சார்பாக, தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனை வழிமொழிந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், ”இந்த அரசு செயல்படாத அரசு என்பதற்கு இது ஒன்றே போதும்”, என்று தெரிவித்து உள்ளனர்.
 
இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மாண்புமிகு எஸ்.மணிகுமார் மற்றும் திரு. எம்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் வழக்கு எண். WP (MD) No.10126 / 2017, 9/06/2017 அன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் ஓய்வு பெற்றவர்களுக்கு 31.3.2017 வரை வழங்க வேண்டிய நிதி பின்வருமாறு:-

வைப்பு நிதி ரூ. 319.96 கோடி
பணிக்கொடை      ரூ. 868.73 கோடி
விடுப்பு ஒப்படைப்புச் சம்பளம் ரூ. 286.80 கோடி
ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை ரூ. 177.34 கோடி
மொத்தம்  ரூ. 1652.83 கோடி

வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், தொழிற்சங்கங்களின் போராட்டத்தின் விளைவாக ரூ.950 கோடியை மேற்கண்ட பாக்கிக்காக வழங்க ஒப்புக்கொண்ட பாக்கி ரூபாய் 700 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை 16.6.2017, 22.06.2017, 7.8.2017, 29.8.2017 மற்றும் 5.9.2017 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தில் நிர்வாகத் தரப்பில் போக்குவரத்துத் துறை செயலாளர் அவர்கள் மொத்தமாக போக்குவரத்துக் கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளைப் பற்றி 30.6.2017 வரைக்கான ஒரு பட்டியலை அளித்துள்ளார். அதன்படி,

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூபாய் 1138.66 கோடியும்
தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ரூபாய் 5349.93 கோடி
விபத்து வழக்குகளுக்காக ரூபாய் 724.59 கோடி
வங்கியில் பெற்றுள்ள கடன் ரூபாய் 442.67 கோடி
அரசு மற்றும் டி.டி.எப்.சி.யில் கடன் பெற்றது ரூபாய் 8864.09 கோடி
இதர எரிபொருள்கள், சுங்க வரி மற்றும் வரி பாக்கிக்காக ரூபாய் 544.94 கோடி
ஆக மொத்தம், நிலுவைத் தொகை ரூபாய் 17064.88 கோடி என்று எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் அளித்துள்ளார்.
 
அமைச்சர் கொடுக்கும் நிலுவைத் தொகை விபரம்:

·         தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 2006 முதல் 2011 வரை உள்ள நிலுவைத் தொகை ரூ.922.24                     கோடி.

·         அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.928.86 கோடி.

·         போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்கிய தொகை 3685.89 கோடி ரூபாய்

என்று அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார். இதனால் 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் 13,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. 43,000 தொழிலாளர்கள் புதியதாக வேலைக்கு எடுக்கப்பட்டார்கள். 5 ஆண்டு ஒப்பந்தத்தை 3 ஆண்டு என குறைத்து இரண்டு ஒப்பந்தங்கள், 60 சதவிகித  ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. போனஸ் 8.33 சதவிகிதம் ரூபாய் 2500 என்பதை 20 சதவிகிதம் ரூபாய் 8400 ஆக உயர்த்தி வழங்கியது போன்ற செலவினங்களுக்கு தி.மு.க. அரசு நிதி வழங்கியதை அமைச்சர் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 31.3.2017 வரை நிலுவைத் தொகை ரூபாய் 1652 கோடி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறியதை தன்னுடைய அறிக்கையில் 1231.96 கோடி என குறைத்து கூறி உள்ளார். இன்று வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 31.3.2017 வரை உள்ள ரூபாய் 1652 கோடியில் ரூபாய் 950 கோடி  மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூபாய் 700 கோடி நிலுவையில் உள்ளது. அதன் பிறகு இன்று வரை நிலுவைத் தொகை என்பது மேலும் ஒரு ரூபாய் 750 கோடிக்கு கூடுதலாகி தற்போது வரை வழங்காத தொகை ரூபாய் 1450 கோடி நிலுவையில்உள்ளது.
 
ஆனால், ரூபாய் 950 கோடியை வழங்கி இருப்பதாக நீதிமன்றத்தில் கொடுத்த வாக்கு மூலத்திற்கும் அமைச்சர் ரூபாய் 3050 கோடி வழங்கி விட்டதாக அறிக்கையில் கூறுவதற்கும் உள்ள வேறுபாடு உள்ளது. அப்படி அதிகமாக 2121 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருந்தால் நீதிமன்றத்தில் அரசு அதிகாரிகள் கைகட்டி வாய் பொத்தி நிற்க வேண்டிய அவசியம் என்ன?
 
மேலும், போக்குவரத்துக் கழகங்களுக்கு அதி.மு.க. அரசு ரூபாய் 10513 கோடி வழங்கியிருப்பதாக சொல்வது உண்மையானால் எந்த பேருந்துகளும் வாங்காமல், எந்தஒரு ஊதிய உயர்வும் வழங்காமல் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களுடைய பலன்களுக்காக நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? ரூபாய் 10513 கோடி வழங்கப்பட்டிருந்தால் கழக சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டிய அவசியம் என்ன? இவைகளையெல்லாம் அமைச்சருடைய அறிக்கையில் உள்ள முரண்பாடுகள்.
 
தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. போன்ற நிறுவனங்களை துவக்கி இருப்பது போக்குவரத்துக் கழகங்கள் ஈட்டிய லாபமும் ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் அந்த கல்வி நிறுவனங்களுக்காக தாங்கள் செலுத்தும் பங்கு தொகை என்பதையும், அப்படிப்பட்ட நிறுவனங்களை முறையாக நடத்தாமல் அரசுக்கு தாரை வார்த்து தொழிலாளர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதை அமைச்சர் மறந்து விட்டார் போலும்.
 
பேருந்துகளில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்களுக்கு குடிப்பதற்கு நல்ல குடிநீர் இல்லை. இந்தச் சூழ்நிலையில் அம்மா குடிநீர் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் குடிநீர் விற்பனை செய்து அதிலும் பெறும் நட்டத்தை காண்கிறோம் என்று மார்தட்டிக் கொள்வதில் என்ன பெருமை?
 
பேருந்து பராமரிப்பு என்பது முழுமையாக இல்லை. 9 ஆண்டுகளுக்கு மேலாக வயது முதிர்ந்த இயக்கத் தகுதி அற்ற பேருந்துகள் 90 விழுக்காடுகள் இருக்கின்றன. அவைகளினால் ஏற்படுகின்ற பயண வசதி குறைவுகளை மக்கள் அடிக்கடி வெளிப்படுத்துகிறார்கள். ஏராளமான விபத்துக்களையும் மக்கள் சந்திக்கிறார்கள். இதனால் ஏற்படும் இழப்பிற்கு இழப்பீடு தொகையை நாளுக்கு நாள் அதிகமாக வழங்க வேண்டிய நிலை உருவாகி இருப்பது பேருந்து பராமரிப்பு இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்.
 
பணிமனைகள் பராமரிக்கப்படுவதில்லை. கழிவறை, ஓய்வறை இல்லை என்பதையும் பல முறை வற்புறுத்தியும் அரசு கவனம் செலுத்தாததால் நாகை மாவட்டம் பொறையாறு பணிமனை இடிந்து விழுந்து 8 தொழிலாளர்களின் உயிரை காவு கொடுத்து அதற்காக அரசு இழப்பீடாக சுமார் 1 கோடி ரூபாய் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவர்கள் பணிமனைகளை பராமரிக்கின்ற லட்சணம் இதன் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது.
 
கழக ஆட்சிக் காலத்தில் டீசல் விலை 40 சதவிகிதம் உயர்ந்த போதிலும் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 50 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்கள் மீது அந்தச் சுமையை சுமத்தினார்கள். தொடர்ந்து ஏறிய டீசல் விலை 2016 வரை குறைக்கப்பட்ட போதும் கூட கட்டணத்தை மறுபரிசீலனை செய்யாத அரசுதான் அ.தி.மு.க. அரசு என்பதை வெளிப்படுத்துகிறது.
 
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஐந்தாண்டு கால ஊதிய உயர்வு என்று இருந்த ஒப்பந்தத்தை தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் மூன்றாண்டாக குறைத்து இரண்டு ஒப்பந்தங்கள் (2007 மற்றும் 2010) செய்து அதன் மூலம் 60 சதவிகிதம் ஊதிய உயர்வை அளித்தும், அதற்குரிய நிதியையும் அரசே வழங்கி கழகங்களை செம்மையாக நடத்தியதை இத்தருணத்தில் நினைவு கூர்ந்து ஆட்சி மாற்றத்திற்குப் பின் அ.தி.மு.க. அரசு 2013 ஆம் ஆண்டு அளிக்க வேண்டிய ஊதிய உயர்வை அளிக்காமல் 2015 ஆம் ஆண்டில் பெரிய வேலை நிறுத்தத்திற்குப் பிறகு 5.5 சதவிகிதம் ஊதிய உயர்வை போக்குவரத்துக் கழக வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஊதிய உயர்வை அளித்தது. மீண்டும் 1.9.2016 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
 
தொழிலாளர்கள் தங்களுடைய பலன்களுக்காக நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமும், நீதிபதிகளும் "அரசின் அலட்சியத்திற்காக தொழிலாளர்களும் நீதிமன்றமும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை" என்று  சொல்லக் கூடிய அவல நிலையை திருத்துவதற்கு வழி இல்லாத மத்திய அரசுக்கு அடிபணிந்து வாய் பொத்தி நடத்தி வரும் அ.தி.மு.க. அரசு தவறான விமர்சனம் செய்வதை தவிர்த்து தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் நன்மை செய்ய முன் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Trending News