வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக திமுக உறுப்பினர் ராஜேந்திரன் இன்று சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பான தீர்மானத்துக்கு விளக்கம் அளித்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
டெல்லி ஜே.என்.யூ., வில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் கடந்த 12-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இந்தச் செய்தியை அறிந்ததுமே முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்தேன். மேலும், அவரது உடலை தமிழகத்துக்கு கொண்டுவர வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். அதன்படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் முத்துக்கிருஷ்ணனின் உடல் தமிழகம் கொண்டுவரப்பட்டது. தமிழக அரசு சார்பில் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், உயர்கல்விக்காக வெளிமாநிலங்கள் செல்லும் தமிழக மாணவர்களை அரசு பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியிருக்கிறார்.
மேற்படிப்புக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.