தமிழகம் மற்றும் கேரளா இடையிலான நதிநீர் பிரச்னை முடிவுக்கு வரும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகிய இருவரும் திருவனந்தபுரத்தில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேச இரு மாநிலங்களைச் சேர்ந்த தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றார். குழுவின் செயல்பாடுகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் ஆய்வு செய்வார்கள் என்று பினராயி விஜயன் கூறினார்.
இந்தக் குழு மூலம் இரு மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கேரளாவில் இருந்து திரும்பியபின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நதிநீர் பங்கீடு குறித்து பேச அமைக்கப்பட்ட குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றார். இந்த பேச்சுவார்த்தை மூலம் கேரளாவுடனான நதிநீர் பிரச்னை முடிவுக்கு வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
காவிரிப் பிரச்சனை குறித்து பதிலளித்த முதலமைச்சர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய குடிமராமத்துப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பருவமழை தொடங்குவதற்குள் ஏரிகள், குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படும் என்றார்.