22 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல்களில் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வெறும் 9 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. இது எங்களுடைய வளர்ச்சியைத்தான் காட்டுகின்றது என சட்டமன்றத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்.
அதுக்குறித்து அவர் பேசியது: -
மக்களவைத் தேர்தலின்போது நாங்கள் என்னென்ன வாக்குறுதிகள் வழங்கி இருக்கின்றோமோ, அதையெல்லாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம். தலைவர் கலைஞர் அவர்கள் எங்களை அப்படித்தான் வளர்த்திருக்கின்றார்கள். எனவே, நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
முதலமைச்சர் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தந்ததுபோல கீழே இருக்கின்ற சக்கரம் மேலே வரும், மேலே இருக்கின்ற சக்கரம் கீழே வரும். அது வரப்போகின்றது. அதைத்தான் எங்களுடைய உறுப்பினர் பொன்முடியும் சொன்னார்.
22 தொகுதிகளில் தேர்தல் நடந்து, 13 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கின்றது. 9 இடங்களில் உங்களுடைய அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கின்றது. 9 பெரியதா? 13 பெரியதா? எனவே, மக்களின் ஆதரவு 13 என்றுதான் சொல்லமுடியும். மக்கள் அந்தளவிற்கு 22 தொகுதிகளில் 13ஐ தி.மு.கழகத்திற்கு கொடுத்திருக்கின்றார்கள்.
அதுமட்டுமல்ல, ஏற்கனவே திருவாரூரைத் தவிர்த்து 12 தொகுதிகள் உங்களிடத்தில் இருந்த தொகுதிகள் அதை நாங்கள் கைப்பற்றியிருக்கின்றோம் என்று சொன்னால், எங்களுடைய வளர்ச்சியைத்தான் இது காட்டுகின்றது. நாங்கள் சொன்ன உறுதிமொழியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். நிச்சயமாக நிறைவேற்றுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு உங்கள் கேள்விக்கு பதில் சொல்கின்றோம்.
இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.