15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் 'செம்மலை' முன்னிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
இதற்கு முன்பு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் நுழைந்ததும் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அதற்கடுத்து உள்ள நுழைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவரது அமைச்சர்களும், அதிமுக எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று மேஜையைத் தட்டி 'அம்மா' 'அம்மா' என்று ஓசை எழுப்பி ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்தார். முதல்வரும் ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தார்.
தற்காலிக சபாநாயகர் செம்மலை முன்னிலையில் உறுப்பினர்கள் பதவியேற்றனர். முதலாவதாக முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், முன்னாள் சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், முன்னாள் அமைச்சர்கள் பதவியேற்றனர். பின்னர் அகர வரிசைப்படி பதவியேற்பு நடைபெற்றது.
மறைந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சீனிவேலுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை அடுத்த கூட்டம் ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.