Brain Health: மனித உடலின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் மூளை, உடலின் மிக முக்கியமாக பாகங்களில் ஒன்று. நமது மனதில் எழும் எண்ணங்கள், உணர்ச்சிகள், நினைவாற்றல், நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள், மறக்கவேண்டிய விஷயங்கள் என அனைத்தையும் கட்டுப்படுத்துவது மூளை தான்.
உடல் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் மூளை: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். நமது சில பழக்க வழக்கங்கள், நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள், மூளையின் ஆற்றலை சைலன்டாக காலி செய்யும், அபாயத்தை கொண்டிருக்கின்றன. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
காலை உணவு: இன்றைய துரித கதியிலான வாழ்க்கையில், நேரம் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, காதல் உணவை தவிர்க்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. காலை உணவை உட்கொள்ளவில்லை என்றால், மூளைக்கான குளுக்கோஸ் மற்றும் அத்யாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் மூளை சோர்வடைந்து விடும்.
பல பணிகளை ஒரே நேரத்தில் செய்தல்: ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது, பெருமை கொள்ளும் விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த பழக்கம், மூளைக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் நிபுணர்கள். இதனால் மூளையின் செயல் திறன், படிப்படியாக குறைந்து, நினைவாற்றல் பாதிக்கப்படலாம்.
அதிக ஒளியில் ஹெட்போன் பயன்படுத்துதல்: சத்தத்தை அதிகமாக வைத்து இசை கேட்பது தலைவலியை ஏற்படுத்துவதுடன், மூளையின் செயல் திறனை பாதிக்கலாம். இதனால் கேட்கும் திறன் பாதிக்கப்படுவதோடு, மனச்சோர்வு நினைவாற்றல் இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
தூக்கமின்மை: போதிய தூக்கம் இல்லாத நிலை, தூக்கமின்மை அல்லது இரவில் தாமதமாக தூங்கி காலையில் தாமதமாக விழிப்பது ஆகியவை, மூளையின் செயல் திறனை பாதித்து, நமது முடிவெடுக்கும் திறன் கற்றல் திறன் குறைகிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இதனால் அல்சைமர் போன்ற மூளை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
அதிக திரை நேரம்: இன்றைய டிஜிட்டல் காலத் திட்டத்தில், அதிக நேரம் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினியை பயன்படுத்தும் வழக்கம் பலருக்கு இருக்கிறது. இதனால் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படுகின்றன.
துரித உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. அதில் இருப்பதெல்லாம் கல்குறிகளும் சர்க்கரையும் மட்டுமே. இவை மூளையை மந்தம் ஆக்கி, மறதி நோய் ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
உடல் உழைப்பு இல்லாத நிலை: இன்றைய நவீன காலகட்டத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதும், நேரமில்லை என்ற காரணத்தைக் காட்டி உடற்பயிற்சி ஏதும் செய்யாமல் இருப்பதும், மூளை ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மனச்சோர்வு மனப்பதற்றம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல்: புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் மதுப்பழக்கம், மூளையில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி, மறதி நோய் ஏற்பட காரணமாகிறது. அளவிற்கு அதிகமாக மது அருந்துவது, மூளை சுருங்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.