தமிழக அரசின் திட்டங்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசுடன் இணக்கமான செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி விளக்கம்!!
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண்டபம் ஒன்றில், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த அதிமுக பொதுக்குழுவில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ படிப்புகளை மேற்கொள்ள தடைக்கல்லாய் இருக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்; அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ‘டிடிவி தினகரன் குடும்பத்தினர் அதிமுகவை எவ்வளவு பாடாய்ப்படுத்தினர் என எல்லோருக்கும் தெரியும். அதிமுக அரசு யாருக்கும் அடிமையாக இல்லை. அதிமுகவை நேரடியாக எதிர்க்க ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லாததால் அரசு ஊழியர்களை தூண்டிவிடுகிறார். கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என தீர்மானிப்பதில் தமிழக மக்கள் சிறப்பானவர்கள். உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும்; அதில் வெற்றி பெறுவது சுலபமல்ல. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற ஏதுவாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்றார்.
என்னுடைய தந்தை திமுகவில் இருந்தவர். 74-ல் முதன்முதலில் அதிமுக கொடி கம்பத்தை எனது கிராமத்தில் நட்டேன். உடனடியாக அதை பிடுங்கி எரிந்தனர். அன்று ஆரம்பித்த கொடி கம்ப பிரச்சனை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் தைரியம் ஸ்டாலினுக்கு இல்லை. அதனால் தான் அரசு ஊழியர்களை தூண்டிவிடுகிறார். "கட்சியே துவங்காமல் சிலர் பேசுகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. டிடிவி தினகரன் மற்றும் குடும்பத்தினர் அதிமுக கட்சியை எவ்வளவு பாடாய்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக அரசு யாருக்கும் அடிமை இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.