சென்னையில் வசிப்பவர்களுக்கு அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசல் என்பது தினசரி வாழ்க்கையின் அங்கமாகிப்போன ஒன்று. அலுவலக நேரத்தில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டைக்கு பயணிப்பவர்கள் எந்த சிக்னலையும் நிச்சயமாக ஒரே முறையில் கடக்க இயலாது.
அண்ணா சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு விமோசனம் அளிக்கும் விதமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த 12-ம் தேதி பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சி.ஐ.டி. சாலை சந்திப்புகளை கடந்து சைதாப்பேட்டை பஸ் நிலையம் வரை ரூ.485 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.
தற்போது அண்ணா சாலையில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையிலான 3 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் 30 நிமிடங்கள் ஆகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்த பயண நேரம் 30 நிமிடங்களில் இருந்து 4 நிமிடங்களாகக் குறையும்.
4 வழிச்சாலையாக திட்டமிடப்பட்டுள்ள இந்த உயர்மட்ட சாலை தினசரி 2.47 லட்சம் வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டிலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போதுதான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் ஆயிரம் விளக்கில் இருந்து சைதாப்பேட்டை வரை திட்டமிடப்பட்டிருந்த இந்த திட்டம் தற்போது தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மாற்றப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களே போதும் என்பதாலும், புதிதாக அனுமதி ஏதும் வாங்கத் தேவை இல்லை என்பதாலும் 6 மாதங்களுக்குள் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானச் செலவு, நேரத்தை குறைக்க மும்பை கடற்கரைச் சாலைத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட Monopile foundation, Segmental launching போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு ஒப்பான தொழில்நுட்பங்களை இத்திட்டத்தில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல், ஒலி மாசு, எரிபொருள் விரயம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க இத்திட்டம் உதவும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மேலும் படிக்க | சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் மூன்றாவது வெற்றி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR