Pongal Special Gift Pack: பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இதுகுறித்து விரைவில் நல்ல செய்தி வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசால் (Tamil Nadu Government) வழங்கப்பட்டு வருகிறது. ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு இந்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும்.
பொங்கல் பண்டிகை வரும் ஜன. 14ஆம் தேதி (Pongal 2025) கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான இந்த பண்டிகைக்கு ரேசன் கடைகள் மூலம் தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் (Pongal Special Gift Pack 2025) ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், கடந்தாண்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ரொக்கம் ஏதும் முதற்கட்டமாக அறிவிக்கப்படாததால் மக்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நிதிச்சுமை காரணமாகவும், மத்திய அரசிடம் இருந்து பேரிடர் நிவாரண தொகை வராததால் மாநில நிதியில் இருந்தே பல்வேறு பேரிடர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதாலும் 1000 ரூபாய் ரொக்கம் அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஆனால், பொங்கல் பரிசுடன் 1000 ரூபாய் வழங்கப்படாதது எதிர்க்கட்சிகளிடம் கடும் விமர்சனத்தை கிளப்பியிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 1000 ரூபாயை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினரும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அந்த வகையில், கடந்தாண்டு 1000 ரூபாய் ரொக்கம் சற்று தாமதமாகவே அறிவிக்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாக தமிழ்நாடு அரசு இந்தாண்டும் ரொக்கத்தொகையை அறிவிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ 1000 வழங்க அறிவிப்பு வரலாம் என சொல்லப்படுகிறது. தென் மாவட்ட சுற்றுப்பயணம் முடிந்து, நாளை அல்லது நாளை மறுதினம் சென்னை திரும்பியதும் இதற்கான ஆலோசனையை முதல்வர் ஸ்டாலின் (Tamilnadu Chief Minister MK Stalin) மேற்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.