அரசு நிர்வாகத்தை சீரழித்து, பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்து அரசியல் சட்டத்தில் மோசடி செய்து வரும் ஊழல் மலிந்த அதிமுக ஆட்சியிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க குடியரசு தலைவர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசனை நடைபெற்றதாக பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளி வரப்போகின்ற நேரத்தில் புதிய பதவி நீக்கத்தை வைத்து இந்த ஆட்சியின் பதவி காலத்தை ஓட்டி விடலாம் என்ற நப்பாசையில் அடுத்த தகுதி நீக்கத்திற்கு திட்டம் தீட்டுகிறது அ.தி.மு.க அரசு. நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க அத்தனை நாடகத்தையும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி நடத்தி கொண்டிருப்பதும், அவசர கதியில் இப்படியொரு நோட்டீஸைக் கொடுக்க முனைவதும் கடும் கண்டனத்திற்குரியது.
அதற்கு சட்டப்பேரவைத் தலைவரையும் பயன்படுத்துவது, “பேரவைத் தலைவர் எந்தச் சூழ்நிலையிலும் நடுநிலை தவறாதவராக, ‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போலத்’ திகழ வேண்டும்” என்று காலம் காலமாக இருந்து வரும் பாரம்பரிய மரபையும், வைர அளவுகோலையும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி தரம் தாழ்த்தி கேலிக்கூத்தாக்கி, தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அரசியல் சட்டத்தையே வெறும் காட்சிப் பொருளாக்குவது பேராபத்தாகும்.
எதிர்கட்சிகள் போராட்டம் என்றால் அனுமதி மறுப்பது, முறைப்படி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கேட்டால் கடைசி நேரத்தில் நிராகரிப்பது, கையெழுத்து இயக்கம் நடத்த வந்த யோகேந்திர யாதவ் போன்றவர்களை கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறித்து, கைது செய்வது என்று ஒரு புறம் காவல்துறையை தன் மூக்குப் போன திசையில் மூர்க்கத்தனமாக அ.தி.மு.க அரசு தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது. ஆனால், அதே நேரத்தில் அ.தி.மு.கவினர் பிரதான சாலைகளையெல்லாம் வளைத்து, பொது போக்குவரத்துக்கு இடையூறு செய்து விளம்பர பேனர்கள் வைத்தாலும், அ.தி.மு.கவினர் மேடை போட்டு, கேட்போர் முகம் சுளிக்கும் வகையில் எத்தனை அசிங்கமான விமர்சனங்களைச் செய்தாலும், திரு எச் ராஜா உயர்நீதி மன்றத்தையே அநாகரிகமாக விமர்சித்து இழிவுபடுத்தினாலும், திரு எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசினாலும், காவல்துறை காதுகளை மூடி கண்ணைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கட்டளையிடப்படுகிறது.
சட்டத்தின் ஆட்சிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறை, இன்றைக்கு கைகட்டி ஊழல்வாதிகளின் கூடாரமாக இருக்கும் ஆளுங்கட்சிக்கு சேவகம் செய்யும் அளவிற்கு சீரழிக்கப்பட்டு, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகக் கட்டமைப்பின் “ஈரல்” கெட்டு அழுகிப்போய் விட்டது மிகுந்த கவலையளிக்கிறது.
ஊழல் அமைச்சர்கள் எல்லாம் தங்கள் துறையில் சுதந்திரமாக ஊழல் செய்து உலா வருவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து பதவியில் அமர்ந்திருக்கிறார் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் திருமதி கிரிஜா வைத்தியநாதன். அமைச்சர்களின் ஊழல்களுக்கு ஒத்துழைக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உடனே மாற்றுவது, ஒரே துறையில் பல வருடங்களாக “செலக்டீவாக” சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மட்டும் தொடர அனுமதிப்பது, மாவட்டங்களில் அமைச்சர்களின் எடுபிடிகளாக இருக்கும் அதிகாரிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களாக நியமிப்பது, எதிர்கட்சியினர் மீது பொய் வழக்குப் போடுவதற்கும், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடவும் ஏற்ற வகையில் அ.தி.மு.க அமைச்சர்களின் பரிந்துரையில் மாவட்ட போலீஸ் அதிகாரிகளை நியமிப்பது, சி.பி.ஐ.யே ரெய்டு செய்தாலும் அந்த டி.ஜி.பி.யை வைத்துக் கொண்டு காவல்துறை நிர்வாகத்தை நடத்துவது என்று, காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தை ஊழல் அமைச்சர்களுக்கு மொத்தமாக அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்கும் வகையில் ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் நடந்து கொள்கிறார் என்பது தமிழகம் இதுவரை கண்டிராத அசாதாரணமான அருவருக்கத்தக்க சூழ்நிலையாக இருக்கிறது.
“நிர்வாகப் பேரிடரில்” சிக்கியிருக்கும் தமிழக அரசு குறித்தும், ஊழல் அ.தி.மு.க அரசு குறித்தும், மாநிலத்தின் நிர்வாகம் பற்றி மத்திய அரசுக்கு மாதாந்திர அறிக்கை அனுப்பும் மாண்புமிகு தமிழக ஆளுநரும் அமைதி காப்பது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது. “மாநிலத்தின் நிலவரங்கள் பற்றி அறிந்து கொள்ளப் போகிறேன்” என்று ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்துள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு, தமிழகத்தில் ஒரு ஊழல் அமைச்சரவை இருப்பதும், அரசியல் சட்டத்தின்படி ஆட்சி நடக்காததும், தமிழக நலன் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டு பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து மக்கள் அல்லாடிக் கொண்டிருப்பதும் தெரியாமல் இருக்கிறது என்பது, அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமாக இருக்கிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க நடக்கும் கூத்துக்களை வேடிக்கை பார்த்து ஒரு சட்டவிரோத அரசை - மெஜாரிட்டியை நிரூபிக்காமல் அத்தனை தகிடுதத்தங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசை நீடிக்க விட்டு, பா.ஜ.க.விற்கு வாக்களிக்காத தமிழகம் எப்படிப் போனால் நமக்கு என்ன என்ற நினைப்பில், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதால் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மவுனமாக ஏனோதானோ என்று இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஐனநாயகம் செத்து, அரசியல் சட்டத்தின் மீதே "மோசடி" செய்து ஒரு எமெர்ஜன்சி போன்ற சூழல் தமிழகத்தில் நிலவுவதை எப்படி மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை.
ஆனால், ஊழலின் பெருவெள்ளமாகத் திகழும் அ.தி.மு.க அரசை அனுமதிப்பது பா.ஜ.க.விற்கு வாக்களிக்காத - அல்லது பா.ஜ.க.விற்கு செல்வாக்கு இல்லாத தமிழகத்தில் உள்ள மக்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருக்கும் குடியரசுத் தலைவர் அவர்கள் நிச்சயம் கருத மாட்டார் என்று நம்புகிறேன். ஆகவே, முற்றிலும் சீரழிந்து விட்ட தமிழக அரசு நிர்வாகத்தை அரசியல் சட்டவிரோத அ.தி.மு.க அரசிடமிருந்து மீட்டு எடுத்து, தமிழகம் அனைத்துத் துறைகளிலும் இழந்து விட்ட செழிப்பினை மீண்டும் பெறவும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்!