ஆளுநர் டெல்லி பயணம்... திமுக ஆட்சி கலைக்கப்படுமா - ஜெயக்குமார் சொல்வது என்ன?

ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், 356 சட்டப்பிரிவின்படி திமுக ஆட்சியை கலைத்தால் மக்கள் ஆனந்தம் அடைவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 25, 2023, 05:16 PM IST
  • இவர்களுக்கு டிஸ்மிஸ் ராசி, ஏற்கனவே 1989 - 1991ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டதுதான் - ஜெயக்குமார்.
  • திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையும் - ஜெயக்குமார்.
  • உதயநிதி ஸ்டாலின் வரலாறு தெரிந்து கொண்டு பேச வேண்டும் - ஜெயக்குமார் அட்வைஸ்
ஆளுநர் டெல்லி பயணம்... திமுக ஆட்சி கலைக்கப்படுமா - ஜெயக்குமார் சொல்வது என்ன? title=

சென்னை அடுத்த புழலில் அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் இன்று பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த கேள்விக்கு,"கோ பேக் ஸ்டாலின் பாட்னாவில் டிரெண்ட் ஆனது. உள்ளூரில் ஓனான் பிடிக்காதவர் வெளியூரில் புலியை பிடிப்பதாக கூறி புலிக்கு பயந்தவர்கள் தன் மீது படுத்து கொள்ளுங்கள் என கூறுவது போல உள்ளது. இவர் சென்றதால் எந்த தாக்கமும் ஏற்பட போவதில்லை. 

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, ஊழலிலே திளைத்தவர்களை பாதுகாப்பது, செந்தில் பாலாஜியை பாதுகாக்க நினைப்பது என ஜனநாயகத்தில் ஏற்று கொள்ள முடியாத செயல்கள் நடந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலம் உள்ளது. அரசியலில் நண்பன், எதிரி என யாரும் இல்லை. இப்போது ஒன்று கூடியுள்ளவர்கள் தொடர்வார்களா என சந்தேகமாக உள்ளது. 10 மாதத்தில் பல மாறுதல்கள் வரும்.

திமுகவின் டிஸ்மிஸ் ராசி

திமுக ஆட்சி தானாக விழுந்து விடும். ஆளுநர் டெல்லிக்கு சென்றுள்ள நிலையில் ஒரு வார காலம் தங்க உள்ளார். திமுக ஆட்சியின் அவல நிலையை உள்துறை அமைச்சர், பிரதமரிடம் கொடுக்க உள்ளார். திமுக ஆட்சியை 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைத்தால் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள். இவர்களுக்கு டிஸ்மிஸ் ராசி, ஏற்கனவே 1989 - 1991ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டதுதான். கௌரவர்கள், பாண்டவர்களுக்குள் பிரச்சனை இருந்தாலும், கௌரவர்கள் வீழ்ச்சிக்கு துச்சாதனன், சகுனி காரணமாக இருந்தது போல திமுகவில் பல துச்சாததன், சகுனிகள் உள்ளனர், அவர்களே இந்த ஆட்சியை வீழ்த்தி விடுவார்கள்.  அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும், தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையும்" என்றார். 

மேலும் படிக்க | விஷமிகளின் வேலை..! கொதிக்கும் விஷன்.V! நடந்தது என்ன?

வேஸ்ட் லக்கேஜ்

ஜூலை 1ஆம் தேதி மாநாடு நடத்தப்படும் என்று ஓபிஎஸ் அறிவிப்பு குறித்த கேள்விக்கு மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் அனைவரும் தற்போது மீண்டும் திரும்பி வருகின்றனர். அதிமுக என்ற என்ஜின் சென்று கொண்டிருக்கிறது, வேஸ்ட் லக்கேஜ் கழற்றி விடப்பட்டது. ஓபிஎஸ் தரப்பில் திருச்சியில் நடத்தப்பட்ட மாநாடு தோல்வியடைந்தது, கூலிக்கு மாரடைப்பது போல பணம் கொடுத்து ஆட்களை திரட்டி கூட்டத்தை சேர்த்தனர். 

20கோடி ரூபாய் செலவு செய்தால் யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தலாம், அதனை வைத்து ஓபிஎஸ்க்கு செல்வாக்கு உள்ளதாக எடை போட முடியாது. அதிமுகவின் கிளைக்கழகம் முதல் தலைமைக்கழகம் முதல் எடப்பாடியின் ஒற்றை தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது. தன்னுடையை இருப்பை காட்டி கொள்வதற்காக மாநாடு அறிவிப்பு. இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்றார்.

டாஸ்மாக் அரக்கனை சுமப்பது ஏன்?

நேரு ஸ்டேடியத்தில் வைத்தா ஆப்பரேஷன் செய்ய முடியும் என சுகாதாரத்துறை அமைச்சர் கேள்விக்கு, "தமிழ்நாட்டில் மேலும் பல ஈடி (ED) ஆப்பரேஷன் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் திமுகவில் உள்ளவர்கள் கைது மாதம். 500 மதுக்கடைகள் மூடல் என்பது ஏமாற்று செயல். ஆட்சேபனை மற்றும் வருமானம் குறைந்த கடைகளே மூடப்பட்டது. படிப்படியாக குறைப்பதாக அதிமுக அறிவித்த நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு என கூறிய திமுக உடனே மதுவிலக்கு கொண்டு வராதது ஏன்?. டாஸ்மாக் அரக்கனே தேவையில்லை என முன்பு கூறியவர்கள் தற்போது அந்த அரக்கனை சுமப்பது ஏன்? " என கேள்வியெழுப்பினார். 

துணை முதல்வர் (அ) விளையாட்டுத்துறை அமைச்சர்

மேலும், "உதயநிதி ஸ்டாலின் வரலாறு தெரிந்து கொண்டு பேச வேண்டும்" என உதயநிதி ஸ்டாலினை இரண்டு முறை துணை முதல்வர் என கூற முற்பட்டு பின்னர் சுதாரித்து விளையாட்டு அமைச்சர் என்று கூறி ஜெயக்குமார் சமாளித்தார். இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாகவும், செந்தில்பாலாஜி வாயை திறந்தால் மாட்டி கொள்வோம் என அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தார். திரையை போட்டு செந்தில்பாலாஜி பேச விடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது என்றும் ஆனால் அமலாக்கத்துறை பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் தெரிவித்தார். 

விஜய் அரசியல் என்ட்ரி

நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அரசியல் என்பது கடல், யார் வேண்டுமானாலும் குதிக்கலாம், நீச்சல் தெரிந்தவர்கள் அதில் கரை சேரலாம். நிச்சல் தெரியாதவர்கள்  கடலில் மூழ்கி பின்னர் மிதப்பார்கள்" என தெரிவித்தார். 

அண்மை காலமாக பாஜக - அதிமுக இடையே மேற்கொள்ளப்பட்டு வந்த விமர்சனங்கள் முடிவுக்கு வந்து விட்டதாகவும், சமூக வலைத்தளங்களில் அடையாளம் தெரியாதவர்கள் கூறும் கருத்துக்களுக்கு நாம் எதிர்வினை ஆற்ற முடியாது எனவும், மாநில தலைவர், மாநில பொறுப்புகளில் உள்ளவர்களின் விமர்சனத்திற்கு பதிலளித்து விட்டதாகவும், தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என ஜெயக்குமார் தெரிவித்தார். 

பேனா சின்னம் கடலில் அமைக்க கூடாது எனவும், பேரிடர் காலங்களில் சென்னை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், வரிப்பணத்தில் பேனா சின்னம் அமைப்பதை கைவிட்டு அவர்களது சொந்த பணத்தில் அறிவாலயத்தில் பேனா சின்னம் வைத்து கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடப்பட்டுள்ள வழக்கில் நியாயம் கிடைக்கும் என ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் ரயிலை கவிழ்க்க சதி - காவல்துறை தீவிர விசாரணை
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News